மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு விற்பனைக்கு உள்ளதாக வெளியான தகவல் குறித்து ஜெ. தீபா ஜெயக்குமார் மாதவன் ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும், வேதா இல்லத்துக்கு சசிகலா உள்பட யாரும் உரிமை கோர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தீபாவும், தீபக்கும் விலை பேசி வருவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, “வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல; தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்; இது எங்களின் அமைதியை கெடுத்து, தேவையற்ற அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்கிறது” என்று ஜெ. தீபா ஜெயக்குமார் மாதவன் ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
ஜே. தீபா அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது: “சில காலங்களாக ஊடகங்களில் கடுமையான கருத்துகள் பரவிவருவதால் அதை மறுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளதால் மட்டுமே இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். வேதா நிலையம் விற்பனைக்கு அல்ல; தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்; இது எங்களின் அமைதியை கெடுத்து, தேவையற்ற அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு எங்களது பூர்வீக சொத்து. வேதா நிலையத்தை நாங்களே பராமரித்துக் கொள்வோம். சசிகலா உள்பட யாரும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு உரிமை கோர முடியாது. போயஸ் தோட்ட இல்லத்துக்கு விரைவில் குடியேற உள்ளேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”