Advertisment

சசிகலா குடும்பத்தால் மன உளைச்சலில் உள்ளேன்; கொலை மிரட்டல் என்பது பொய் புகார் – ஜெ.தீபா விளக்கம்

சசிகலா என்னிடம் இருந்து போயஸ் கார்டன் வீட்டை பறிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார்; அர்ச்சகர் புகார் விவகாரத்தில் ஜெ.தீபா விளக்கம்

author-image
WebDesk
New Update
J Deepa

ஜெ.தீபா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என கோரி அர்ச்சகரை தாக்க முயன்றதாக ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் மீது அர்ச்சகர் ஹரிஹரன் புகார் அளித்துள்ள நிலையில், இதுகுறித்து ஜெ.தீபா விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

சென்னை தி.நகர் அருளாம்பாள் தெருவை சேர்ந்தவர் கோயில் பூசாரி ஹரிஹரன் (42). இவர் போயஸ் தோட்டம் அருகில் முன்னாள் ஜெயா டிவி கட்டடத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜை செய்து வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் அவரது கணவர் மாதவனும் தன்னை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: நீட் பிரச்னை: மத்திய அரசு- ஆளுனர் ஆர்.என் ரவியை கண்டித்து தி.மு.க உண்ணாவிரதம் அறிவிப்பு

அந்தப் புகாரில், கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தினமும் இந்த பிள்ளையாருக்கு பூஜை செய்து வருகிறேன். அவரது மறைவுக்கு பிறகு சசிகலாவின் அனுமதியுடன் நான் பூஜை செய்கிறேன். போயஸ் தோட்டத்தில் பிள்ளையார் கோயில், சிவன் கோயிலிலும் பூஜை செய்கிறேன். அதற்கான செலவு மற்றும் மாத சம்பளத்தை சசிகலா கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் நான் கோயிலில் பூஜை செய்தேன். அப்போது போயஸ் தோட்டத்திற்கு தேசியக் கொடியேற்ற வந்த தீபாவும் அவரது கணவர் உட்பட 50 பேர் என்னை பூஜை செய்யாமல் தடுத்தனர். அப்போது ஜெ.தீபா என்னிடம் வந்து உன்னை யார் பூஜை செய்து விட்டது? என கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி என்னை தாக்கவும் செய்தார். பூஜை பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். இதை தடுக்க வந்த காவலர் ஒருவரையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். இனி இந்த கோயிலுக்கு பூஜை செய்தால் கொலை செய்துவிடுவோம் என தீபாவும் மாதவனும் அவர்களுடன் வந்தவர்களும் மிரட்டினர். மேலும் பிள்ளையாரின் வெள்ளி கிரீடத்தையும் பறிக்க முயன்றனர்.

இதனால் கோயிலில் தொடர்ந்து பூஜை செய்ய எனக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக்கு கொலை மிரட்டல் விடுத்த தீபா, மாதவன் மற்றும் அவர்களுடன் வந்த 50 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஜெ.தீபா, அந்த பிள்ளையார் கோயில் ரொம்ப வருசமா இருக்கு. சம்பவத்தன்று அந்த அர்ச்சகர் திடீரென வந்து, அங்கு பூஜை செய்ததால், நான் சென்று விசாரித்தேன். அவர் சரியாக பதில் சொல்லாமல், நான் 20 வருசமா பூஜை பண்றேன், நீங்கள் யாரு என்னை கேட்க எனக் கேட்டார். அதற்கு இந்த சொத்துக்கு உண்மையான உரிமையாளர்கள் நாங்கள் தான், எங்களோட அனுமதி இல்லாமல் பூஜை செய்யக் கூடாது என நான் கூறினேன்.

அவரோ, நீங்கள் யாருனு எனக்கு தெரியாது. நான் சம்பளத்துக்கு இதைச் செய்யலைனு சொன்னார். நான் உங்களை சசிகலா தானே இத்தனை வருசமா இதை செய்ய சொல்லிருக்கனும், இனி இது எங்கள் சொத்து, அதனால் எங்கள் அனுமதி கேட்கணும் என்று கூறினேன். அவர் எதையும் கேட்கவில்லை. அங்கிருந்தவர்களும், காவல்துறையினரும் அவரிடம் பேசி அனுப்ப முயற்சித்தனர். அப்போது அவர் கோயிலில் இருந்த கவசத்தை எடுத்துச் செல்ல முயன்றார். நான் எடுத்துச் செல்லக் கூடாது என்று கூறினேன். ஆனால் அவர் புகாரில், நான் அவரிடம் இருந்து பறிக்க முயன்றதாக கூறியுள்ளார். அப்படி எதுவும் நடக்கவில்லை. அங்கிருந்த ஊடகம், காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் இது தெரியும். 50 பேர் மிரட்டியதாக கூறியுள்ளார். கொடியேற்ற வந்த பெண்கள் அவரை மிரட்டினார்களா? எதுவும் உண்மையில்லை. சசிகலா மூலம் தேவாதி என்பவர் நியமித்ததாக அர்ச்சகர் புகாரில் கூறியுள்ளார். ஆனால், எங்களிடம் சுயவிருப்பத்தில் செய்வதாக கூறினார்.

என்னுடைய சகோதரர் தீபக் ஏற்கனவே என்னை அந்த வீட்டிற்கு விடாமல் பிரச்சனை செய்து வருகிறார். இந்தநேரத்தில் அந்த அர்ச்சகரிடம் நீங்கள் யார் எனக் கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். சுதந்திரத் தினத்தன்று யாருக்கும் இப்படி நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை. யாரும் எந்த தகாத வார்த்தையும் பேசவில்லை.

சசிகலா தூண்டுதலின்பேரில் அவர் இப்படி செய்துள்ளார். சசிகலா என்னிடம் இருந்து அந்த வீட்டை பறிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இது ஒரு பொய்யான புகார். நான் கொடநாடு வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பேசியதால், என் மீது இப்படி புகார் அளித்துள்ளனர். கனகராஜ் என்பவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். கொடநாடு வழக்கில் நான் முழு ஆய்வு செய்துள்ளேன். கொடநாடு முழுமையும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அவர்கள் குடும்பத்தினர் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா குடும்பத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என் தம்பியை குடிக்கு அடிமையாக்கி அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். என்னுடைய அத்தைக்கு குடும்பம் இல்லாமல் அனாதையாக்கிவர்கள் அவர்கள். ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரைகளை தமிழக முதல்வர் செயல்படுத்த வேண்டும். கொடநாடு வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Sasikala J Deepa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment