ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆணையமே மேற்கட்ட விசாரணை வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
இந்த ஆணையத்தின் பரிந்துரையின் பேரில்தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் சசிகலாவால் அதிமுக கட்டுப்படுத்தப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேலும் ஜெயலலிதாவின் இரத்த உறவுகள் அவர் அருகில் நெருங்க விடவில்லை. அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமும் அளிக்கப்படவில்லை.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் கடந்த காலங்களில் அவருக்கு பெரிதளவிலான உடல்நிலை பாதிப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, “ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு உயிருடன்தான் கொடுண்டுவரப்பட்டாரா?
அவ்வாறு கொண்டுவரப்பட்டால் அவருடன் காவலர்கள் வராதது ஏன் எனவும் கேள்வியெழுப்பினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டன.
அறிக்கையில் சசிகலா, ஜெ. ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா குடும்ப மருத்துவர் உள்பட 8 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“