ஜெ.தீபா, ‘ஆக்டிவ்’ அரசியலுக்கு திரும்ப முடிவெடுத்திருக்கிறார். அதன் ஒரு அம்சம்தான் அரியலூர் மாணவி அனிதாவின் இல்ல விசிட்!
எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை என்ற பெயரில் இயக்கம் தொடங்கியவர் ஜெ.தீபா. ஆரம்பத்தில் ஜெயலலிதா மீது அபிமானம் வைத்திருந்த தொண்டர்கள், சென்னை தி.நகரில் உள்ள இவரது வீட்டை மொய்த்தனர். ஆனால் கடந்த பிப்ரவரியில் மெரினாவில் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தியானத்திற்கு பிறகு, தீபாவின் இல்லம் வெறிச்சோட ஆரம்பித்தது.
தவிர, ஜெ.தீபா தனது கட்சிக்கு தனது குடும்ப நண்பர் மற்றும் டிரைவரான ராஜாவை தலைவராகவும், ராஜாவின் மனைவியை செயலாளராகவும் அறிவித்தது நகைப்புக்கு உள்ளானது. அதன்பிறகு தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையிலான மோதல் ‘டாக்’ ஆனது. மாதவன் தன் பங்கிற்கு தனிக் கட்சி தொடங்கி பரபரப்பைக் கூட்டினார்.

ஆனால் திடீரென ஒரு நாள் போயஸ் கார்டன் இல்ல வாசலில் ஜெ.தீபாவும், மாதவனும் கைகோர்த்து, அந்த இல்லத்திற்கு உரிமை கொண்டாடி குரல் கொடுத்தனர். அங்கு தீபாவுக்கும் அவரது சகோதரர் தீபக்கிற்கும் இடையே வாக்குவாதம், மாதவனை நோக்கி ராஜா விசிய அனல் வார்த்தைகள் என மீடியாவில் பரபரப்பு செய்தி ஆனார்கள். இவை எல்லாமே ஜெ.தீபாவுக்கு ‘நெகடிவ் பப்ளிசிட்டி’ ஆனது.
இதற்கிடையே எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை என்கிற தனது கட்சியின் பெயரை, ‘அதிமுக ஜெ.தீபா அணி’ என அறிவித்துக்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கான உரிமைப் போரில் தீபா குதித்தார். இவரது அணி சார்பிலும் டெல்லியில் தேர்தல் ஆணையத்தை அணுகி, அபிடவிட்களை தாக்கல் செய்தனர். ஆனால் அந்த அபிடவிட் தாக்கலில் முன்னால் நின்ற மதுரை பிரமுகர் பசும்பொன் பாண்டியனே பிறகு கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறி கிளம்பிவிட்டார்.
இப்படி தொட்ட விஷயங்கள் அத்தனையும் துலங்காததால் துவண்ட தீபா, மீண்டும் தனது கணவர் மாதவனையும் அரசியல் பயணத்தில் இணைத்துக்கொள்ள முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதவனை அழைத்தார் ஜெ.தீபா. இதற்காகவே காத்திருந்த மாதவனும் உற்சாகமாக ஜெ.தீபாவின் தி.நகர் இல்லத்திற்கு வந்தார்.
அங்கு பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும், மாதவன் தன்னை நம்பி வந்த நிர்வாகிகளுக்கும் கட்சியில் முக்கிய பதவிகளை கேட்டாராம். அதற்கு தீபா, ‘நீங்கள் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள். ஆனால் அரசியல் ரீதியாக இறுதி முடிவுகளை நான்தான் எடுப்பேன்’ என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
‘அப்போ என்னை நம்பி வந்தவங்களின் கதி?’ என மாதவன் மீண்டும் குரலை உயர்த்த, தீபா அமைதியாக சொன்னது இதுதான்… ‘அம்மாவின் மறைவுக்கு பிறகு உங்களை நம்பி அவர்கள் வந்தார்களா? அல்லது, என்னை நம்பி வந்தார்களா? என்பதை முதலில் முடிவு செய்துவிடுவோம்’! தீபாவின் தீர்க்கமான இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ‘சரி, சரி! நாம் இணைந்து செயல்படுவோம்’ என வழிக்கு வந்தார் மாதவன்.
ஆனால் இந்த பஞ்சாயத்தை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ராஜா, ‘இவ்வளவு நாளும் இந்த இயக்கத்தை பாதுகாத்தது நான். இப்போது இதில் எனது நிலை என்னவென்றே தெரியவில்லை’ என குமுற ஆரம்பித்திருக்கிறார். அவரிடம் தீபா, ‘நீங்கள் எப்போதும்போல கட்சி நிர்வாகிகளிடம் பேசலாம். கருத்துகளை பறிமாறலாம். கட்சி ரீதியான இறுதி முடிவை மட்டும் நான் எடுப்பேன்’ என கூறியிருக்கிறார். ஆனால் ராஜா, கொதிப்புடன் அங்கிருந்து கிளம்பிப் போயிவிட்டாராம்.
இதன்பிறகே ‘நீட்’ அவலத்தால் பலியான அரியலூர் மாணவி அனிதா இல்லத்திற்கு செப்டம்பர் 19-ம் தேதி தனது கணவர் மாதவன் சகிதமாக கிளம்பிப் போனார் தீபா. போகிற வழியில் பல்வேறு கிராமங்களில் ஜெ.தீபா அணியினர் கொடுத்த வரவேற்பில் தீபா, மாதவன் இருவருமே நெகிழ்ந்து போனார்களாம். அனிதா இல்லத்திற்கு சென்ற இடத்திலும் இவர்களுக்கு கூடுதல் ரெஸ்பான்ஸ்!
அனிதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்த கையுடன், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசி வருகிறார் தீபா. இந்த நிலையில் செப்டம்பர் 21-ம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தீபாவும் மாதவனும் சென்று தரிசித்துவிட்டு வந்திருக்கிறார்கள். ‘அரசியலில் இனி புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்போம். அதிமுக.வில் எடப்பாடி தரப்பு உள்பட யார் நம்முடன் இணைந்து செயல்பட விரும்பினாலும் ஓ.கே! திமுக.வையும் சசிகலா தரப்பையும் தீவிரமாக எதிர்ப்போம்.’ என்பதே ஜெ.தீபாவின் நிலைப்பாடாம். பார்க்கலாம்!