ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி பெங்களூரு அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூரு ராமசந்திரா கிராமம் பகுதியைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ் என்பவரின் மனைவி எஸ்.அம்ருதா . பெங்களூரு பசவனகுடி சம்பத் ஐய்யங்கார் மகள் எல்.எஸ்.லலிதா. பெங்களூரு பிலிஹாஹள்ளி டாக்டர் கே.ரவீந்திரநாத் என்பவரின் மனைவி ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்கள். அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள். இறந்த ஜெயலலிதாவிற்கு எங்களது குல வழக்கப்படி இறுதிசடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மறைந்த முதல்வருக்கு மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்ற முறையில் இறுதி சடங்கு செய்ய எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதற்கு எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர். இன்று காலை இதுதொடர்பாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பாக மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் முறையீடு செய்தார். அப்போது நீதிபதி, இந்த வழக்கை பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிடுகையில், ‘‘ இந்த வழக்கு முற்றிலும் அடிப்படை ஆதாரமில்லாத ஒன்று. விளம்பர நோக்கில் மனுதாரர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தனிநபரின் அந்தரங்கம் தொடர்புடையது. இது விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றால் இதுபோல இன்னும் ஆயிரம் பேர் உரிமை கோரி மனுக்களை தாக்கல் செய்வார்கள். எனவே இதுபோன்ற மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடாது’’ என்றார்.
அப்போது நீதிபதி, ‘‘ வாரிசு என உரிமை கோரி ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். அதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அம்ருதா முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மகள் தானா? என்பதைக் கண்டறிய ஏன் டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிடக்கூடாது?’’ என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, ‘‘ நாங்கள் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக உள்ளோம். இந்த வழக்கை நாங்கள் விளம்பர நோக்கத்தோடு தாக்கல் செய்யவில்லை. குடும்ப உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்’’ என்றார்.
அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை. அவரது இறப்பிற்கு பிறகு, தனிப்பட்ட வாழ்வுக்கு சொந்தம் கொண்டாடி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். எனவே இதை அனுமதிக்கவே கூடாது, என்றார்.
அப்போது வழக்கறிஞர் பிரகாஷ், ‘‘ ஆயிரம் பேர் வந்து வழக்கு தொடரவில்லை. அம்ருதா தான் ஜெயலலிதாவின் மகள் என்ற அடிப்படையில்தான் நாங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளோம்’’ என்றார்.
அதற்கு நீதிபதி, ‘‘ ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை இதுபோன்ற வாரிசு பிரச்சினையே எழவில்லை. அவர் மரணமடைந்த பிறகு யார்? யாரோ? உரிமை கோருகின்றனர். ஏன் இத்தனை காலம் இதுகுறித்து பேசவில்லை. மனுதாரர் என்ன செய்தார்?.
அதற்கு வழக்கறிஞர் பிரகாஷ், ‘‘ இதுதொடர்பாக எங்களது தரப்பு விளக்கத்தை கூடுதல் மனுவாக தாக்கல் செய்கிறோம். 2013-ல் போயஸ் கார்டனில் இருந்து பெங்களூருவில் உள்ள அம்ருதாவின் இல்லத்திற்கு எத்தனை தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளது என்பதை ஆய்வு செய்தாலே எங்களது தரப்பு நியாயம் புரியும்.
நீதிபதி, ‘‘ ஜெயலலிதா தமிழகத்தின் முன்னாள் முதல்வர். அவர் தனிப்பட்ட நபர் அல்ல. அவரது சொத்துக்கு உரிமை கோரி அதற்கான ஆவணங்களை பரிசீலிக்கலாம். ஆனால், இறுதிசடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என மகள் என்ற அடிப்படையில் உரிமை கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் உண்மைத்தன்மை குறித்து முதலில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதுபோல இந்த மனுவை ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தான்.
இந்த வழக்கில் ஏதேனும் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால் மட்டுமே அரசு தரப்பு வாதங்களை கோர முடியும். முன்னாள் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏதும் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அரசு செயல்படுகிறது என்பதை இந்த நீதிமன்றம் உணருகிறது. ஒருவேளை டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட்டால் பொது அமைதிக்கு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதை தீபக் மற்றும் தீபாவும் எதிர்க்கலாம் என தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் பிரகாஷ், ‘‘ டிஎன்ஏ பரிசோதனை கோருதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றிணைத்து திருத்திய மனுவை நாளை தாக்கல் செய்கிறோம் என்றார். அதையேற்ற நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்