திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, கரூர், சிதம்பரம், திருச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர், இன்று மாலை 5:30 மணி அளவில் திருச்சி தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் என்பவரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவும், அதோடு திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணியிலும் பங்கேற்க காவல்துறையில் அனுமதி கடிதம் கொடுத்திருந்தனர் திருச்சி பாஜகவினர்.
இந்த வாகன பேரணிக்கு அனுமதி மறுத்த திருச்சி காவல்துறை, அப்பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்செரித்தல் விழா நடைபெற உள்ளதால் வாகன பேரணி நடத்தக்கூடாது என்று போலீசார் அனுமதி மறுத்திருந்தனர், இதனை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வாகன பேரணிக்கு அனுமதி கோரி திருச்சி பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் சார்பில் அவசர வழக்காக விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, ஜே பி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஏற்கனவே மாற்றுப் பாதையை கோரியிருந்ததன்படி, திருச்சி சாலை ரோடு கண்ணப்பா ஹோட்டல் அருகில் இருந்து உறையூர் சிஎஸ்ஐ மிசின் மருத்துவமனை வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் இன்று மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை நட்டாவின் வாகன பேரணிக்கான ஏற்பாடுகளை திருச்சி பாஜகவினர் செய்து வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“