Advertisment

‘வாக்குறுதிகள் மீது நம்பிக்கை தகர்ந்து வருகிறது...’ நவ. 1 முதல் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் மீதான நம்பிக்கை மெல்லத் தகர்ந்து வருவதால், நவம்பவர் 1-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.

author-image
WebDesk
New Update
JACTO GEO

நவ. 1 முதல் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு (கோப்பு படம்)

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் மீதான நம்பிக்கை மெல்லத் தகர்ந்து வருவதால், நவம்பவர் 1-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.

Advertisment

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் திங்கள்கிழமை (அக்டோபர் 30) நிதித்துறை செயலரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். 

ஜாக்டோ ஜியோ சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் அரசின் திட்டங்கள் வெறும் பெயரளவில் உள்ள திட்டங்களாக மாறிவிடாமல் இருக்க அவற்றை கடைசி பயனாளிக்கும் கொண்டு சேர்க்கும் ஏற்பாட்டை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவற்றை தனியார் மூலம் செய்ய முனைவது மக்களுக்கு முழுப்பலனை அளிக்காது.

தனியார் வசம் என்பதே லாபநோக்கத்தை அடிப்படையாக கொண்டது என்பதை முதல்வரும், அமைச்சர்களும் அறியாதவர்கள் இல்லை. இத்தகைய திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக அரசுத்துறை ஊழியர்கள், பணியாளர்கள் முழுமையாக செய்து வந்தனர். அது தொடர வேண்டும்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் இந்த சமுதாயத்துக்கான சேவைகளுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு கவுரவமான வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் உரிமைகளுக்காக போராடுகின்றனர். அரசுத்துறைகள், பள்ளிகள், கல்லூரிகளில் ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது, சமுதாயத்தின் பிரச்சினையாகும்.

தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்களின் உணர்வுகளை, உரிமைகளை அவை கொடுக்கப்பட வேண்டியதன் நியாயங்களை நன்கு அறிந்தவராக இருந்ததுடன், நாங்கள் நடத்திய கூட்டங்கள், மாநாடுகளிலும் பங்கேற்று, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் குரல் கொடுத்து எங்கள் நம்பிக்கை நாயகராக திகழ்ந்தார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் 2021 தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான உரிமைகள், சலுகைகள் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். குறிப்பாக புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்தார். சொன்ன சொல் காப்பவர் என்ற திடமான நம்பிக்கையில், திமுக வெற்றி பெற பெரும்பங்காற்றினோம்.

அதன்பின் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க 14-ம் மாநில மாநாடு, ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடுகளில் பங்கேற்ற முதல்வர், எந்த அறிவிப்பும் செய்யாமல், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவற்றை நிச்சயம் நான் செய்வேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் உரிமைகளை போராடி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தியாவின் 4 மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு திரும்புவதாக தெரிவித்த பின்பும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் கூறியபடி அமல்படுத்தாமல் இருப்பது எங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்வரின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கை மெல்ல தகர்ந்து வரும் நிலையில், போராட்டங்கள் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மனு அளித்தது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நிதித்துறை செயலரிடம் 10 அம்ச கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், நவ.1-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், 2-ம் கட்டமாக நவ.15-ம் தேதி முதல் நவ.24-ம் தேதி வரை ஆசிரியர், அரசு ஊழியர் தொடர் போராட்ட பிரச்சார இயக்கம், 3-ம் கட்டமாக நவ.25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம், 4-ம் கட்டமாக டிச.28-ம் தேதி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment