Advertisment

அரசு ஊழியர்கள்- பொதுமக்கள் இடையே பகைமையை உருவாக்குவதா? பிடிஆர்-க்கு ஜாக்டோ- ஜியோ கண்டனம்

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பகைமை உணர்வையும் வெறுப்பு உணர்வையும் வளர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளார் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
JACTO GEO condemns minister PTR Palanivel Thiagarajan, JACTO GEO, PTR Palanivel Thiagarajan interview on teachers and govt staffs, தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜாக்டோ ஜியோ கண்டனம், ஜாக்டோ ஜியோ, JACTO GEO statement, JACTO GEO dissatisfaction

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, மக்கள் மத்தியில் பகைமை உணர்வையும் வெறுப்பு உணர்வையும் வளர்க்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளார் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்பதற்காக களப் பணியாற்றியதாகவும், ஆனால், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் பற்றி பொதுமக்கல் இடையே பகை உணர்வை வளப்பதாகக் கூறி விமர்சனம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"நிதியமைச்சர் நேற்றைய தினம் (23-08-2021) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மிகவும் துச்சமென மதித்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் அந்நியப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும், நிதிநிலை அறிக்கையில், ஒரு ரூபாயில் 19 பைசா ஊதியத்திற்காகவும், 8 பைசா ஓய்வூதியத்திற்காவும் செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு, தொலைக்காட்சிப் பேட்டியில் ஒரு ரூபாயில் 65 பைசா ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவித்து பொதுமக்களிடத்தில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின்பால் பகைமை உணர்வை வளர்க்கும் தவறான புள்ளிவிவரத்தினைப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2002ம் ஆண்டு, தமிழகத்தின் வருவாயில் 94 விழுக்காடு ஊதியம்- ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற கருத்தைத் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் பல்வேறு சலுகைகளை ரத்து செய்து, ஓய்வூதியப் பணப்பலன்களை ரொக்கமாக வழங்காமல் பணப் பத்திரமாகத் தந்தார். அன்றைய தினம், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி 94 விழுக்காடு ஊதியம் - ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்பதனைப் புள்ளிவிவரத்தோடு மறுத்தது மட்டுமல்லாது, ஆளுகின்ற அரசு தனது கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கும் வழங்கும் ஊதியம் - ஓய்வூதியத்தினை சுமையாகக் கருதக்கூடாது. அரசின் திட்டச் செலவீனமாகவே கருத வேண்டும் என்று தெரிவித்தார்.

உரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து, ஜாக்டோ - ஜியோ கிளர்ந்தெழுந்து டெஸ்டா, எஸ்மா சட்டங்களை எதிர்கொண்டு போராடியபோது 1,74,000 பேர் ஒரே ஆணையில் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் சிறைவைக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கியதற்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதும் எஸ்மா- டெஸ்மா வழக்குப் போடப்பட்டது என்பது வரலாறு. கருணாநிதி பிறப்பித்த உத்தரவு 2006ம் ஆண்டு கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், முந்தைய ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட அனைத்துச் சலுகைகளையும், உரிமைகளையும் திரும்ப வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல், 2008ஆம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தபோது, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வினை அறிவித்ததைத் தொலைக்காட்சி வாயிலாகக் கண்டவுடன், உடனடியாக அதிகாரிகளை அழைத்து, தமிழக அரசு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிக்கான உத்தரவினை மருத்துவமனையில் இருந்துகொண்டே கருணாநிதி பிறப்பித்தார் என்ற வரலாற்றினை நிதியமைச்சருக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

நிதியமைச்சர் தன்னுடைய பேட்டியில், கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தங்களது பணியினை மேற்கொண்ட அரசு ஊழியர்களை “ஒருநாள் கூட சம்பளத்தை / ஓய்வூதியத்தினை இழக்காமல்” என்று வசை பாடினார். கொரோனா நோய்த் தொற்றினை எதிர்கொள்வதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ.150 கோடியை இரண்டு முறை வழங்கியதை மறந்துவிட்டு, ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மீது அமைச்சருக்கு இருக்கின்ற வன்மத்தை வெளிக்காட்டியுள்ளார்.

தமிழக முதல்வர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜாக்டோ - ஜியோ கடந்த காலங்களில் நடத்திய அனைத்து போராட்ட - இயக்க நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் வாயிலாகவும், போராட்டக் களத்திற்கு நேரிலே வந்தும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களிலும் ஆதரவினைத் தொடர்ச்சியாக நல்கியதை நினைவூட்ட விரும்புகிறோம்.
மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி, ஜனவரி 2020 முதல் 18 மாதங்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படியினை நிறுத்தி வைத்தது. முந்தைய அதிமுக ஆட்சியும் மத்திய அரசினைப் பின்பற்றி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 18 மாதங்கள் முடக்கி வைத்தபோது, அரசின் முடிவுக்கு எதிராகக் குரல் கொடுத்து, அகவிலைப்படியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வரும் அறிக்கை வெளியிட்டதை நினைவுகூர்கிறோம்.

மேலும், ஜாக்டோ - ஜியோ போராட்டக் களத்திற்கு வந்து உறுதியளித்ததற்கு வலு சேர்க்கும் விதமாக, திமுக தேர்தல் அறிக்கையில் “திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்ற வாக்குறுதி இடம்பெற்றது. இந்த வாக்குறுதியானது ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்று, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றால், ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றால்தான் சாத்தியமாகும் என்பதை அன்றைக்கே உணர்ந்து, கடுமையான களப்பணியாற்றினோம்.

கடந்த மே 7ம் தேதி, தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தருணத்திலிருந்தே, தேர்தலின்போது தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியதைக் கண்டதும், நமது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டது.

ஆனால், நிதியமைச்சர் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, மக்கள் மத்தியில் பகைமை உணர்வையும் வெறுப்பு உணர்வையும் வளர்க்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளார். இப்போக்கானது, அரசிற்கும் ஆசிரியர் - அரசு ஊழியரிடையே, காலங்காலமாக இருந்த நல்லுறவினை பேணிப் பாதுகாத்துவரும் திமுக ஆட்சியில் பெரும் விரிசலை உருவாக்கும் என ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு கருதுகிறது. எனினும், தமிழக முதல்வர் அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவார் என்பதில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பிற்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.

எனவே, தமிழக முதல்வர் இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல், 11 விழுக்காடு அகவிலைப்படி மற்றும் சரண் விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும் அரசுக்கும், ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கும் இடையே இருந்த நல்லுறவினை மீட்டெடுக்கும் வகையில், ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு கனிவுடன் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Ptrp Thiyagarajan Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment