2021ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக ஆட்சி அமைந்த உடன் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்தது.
திமுக ஆட்சிக்கு வந்தும் இந்தத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதற்கு எதிராக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாளை (பிப்.15,2024) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
இதன் பின்னர் பிப்.26ஆம் தேதி காலவறையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (பிப்.13) அமைச்சர் ஏ.வ வேலு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், அமைச்சர்கள் ஏ.வ வேலு, முத்துச்சாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு இன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்த அறிக்கையில், “அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால், அன்றைய தினம் ஊதியம் கொடுக்கப்பட மாட்டாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வருகிற 15ஆம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் உள்ள நிதி சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஏற்கனவே அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“