பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பல கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன்பேரில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிக்கப்படும் போது கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கருதினர். இதன் காரணமாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர், கடந்த 14-ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அப்போது, "பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (மார்ச் 23) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மௌனம் காத்தால், வருகிற 30-ஆம்தேதி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்" என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தின் வளாகம், கோவை சிவானந்தா காலனி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.