பழைய ஓய்வூதிய திட்டம், அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜாக்டோ ஜியோ நடத்த இருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், டிட்டோ ஜாக் அமைப்பும் பங்கேற்கும் என அந்த அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் சண்முகநாதன் நேற்று தெரிவித்தார்.
'டிட்டோ ஜாக்' என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகநாதன், "அரசாணை எண் 243 தொடக்க கல்வி ஆசிரியர்களுக்குப் பெரும் பாதிப்பாக உள்ளது. ஏற்கனவே இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி நாங்கள் போராட்டம் நடத்தினோம்.
ஜாக்டோ ஜியோ எங்களது கோரிக்கையை பிரதான கோரிக்கையாக ஏற்றுள்ளது. 243 அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்புடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக டிட்டோ ஜாக் அமைப்பு முடிவு செய்துள்ளது" என்றார்.
ஜாக்டோ ஜியோ சார்பில், வரும் 15-ம்தேதி நடக்கும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திலும், வரும், 26-ம் தேதி முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திலும் பங்கேற்பது என டிட்டோ ஜாக் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“