சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த ஜன.22ம் தேதி முதல் 30ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சம்பளம் பிடிப்பு போன்ற நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டது.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
இந்த போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டதோடு அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
அந்த சந்திப்பின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
முன்னதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையனை சந்தித்த நிலையில், நேற்று துணை முதலமைச்சரை சந்தித்து வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து பேசினார்கள்.