தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடந்த 22-ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இன்றும் 5வது நாளாக நீடித்து வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 8 லட்சம் பேர் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் வராத பள்ளிக்கூடங்களுக்கு தற்காலிகமாக புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதிப் யாதவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நல்ல முடிவை அரசு அறிவிக்கும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை. அரசால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளுடன் போராட வேண்டாம். அரசின் நிதி நிலையால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க முடியாது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தூண்டிவிட்டு தீவிரமான போராட்டமாக முன்னெடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. ஓய்வூதிய சுமை அதிகரித்து மக்கள் நலப்பணிகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும்.
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்தால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவே அரசு கடன் வாங்கும் நிலை ஏற்படும். ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்ந்த குழு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டது. அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சம்பளம் வழங்க மட்டுமே தமிழக அரசால் செயல்பட முடியாது. மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் நிலையில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சம்பளத்தை மட்டுமே வழங்க முடியாது.
பணிக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில், பணிக்கு திரும்பாதவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.