அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை எதிரொலி : தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மே 8-ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் முன் எச்சரிக்கையாக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மே 8-ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் முன் எச்சரிக்கையாக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் ஆகியன அவர்களின் 4 அம்ச முக்கிய கோரிக்கைகள்!

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு நாளை (8-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் சென்னை நோக்கி புறப்பட்டனர். அப்படி புறப்பட்ட நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் போலீஸார் கைது செய்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் போலீசார் பல்வேறு இடங்களில் அவர்களை பிடித்து போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு வந்தனர்.
இது தவிர மாவட்டத்தின் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிர்வாகிகளையும் போலீசார் அவர்கள் வீட்டிற்கே சென்று அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் போலீஸ் நிலையங்களில் விசாரணைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு, கோமங்கலம், மகாலிங்கபுரம் போலீசாரால் ஜாக்டோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமி பாஸ்கரன், ஜியோ மாவட்ட இணை செயலாளர்கள் சாமிகுணம், ஜெகநாதன், தாலுகா செயலாளர் சின்ன மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அமைச்சர் ஜெயகுமார் பெயரில் இன்று நாளிதழ்களில் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் இடம் பெற்றிருந்தன. தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் சுமார் 19 லட்சம் பேருக்கு மட்டும் அரசின் வரி வருவாயில் 70 சதவிகிதம் செலவு செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டிருந்தது.

பல்வேறு வகைகளில் அரசு வாங்கிய கடன்களுக்கு கட்டப்படும் வட்டிக்கு மட்டுமே 24 சதவிகித பணம் செலவாவதாகவும், எஞ்சிய சுமார் 8 கோடி மக்களுக்கு 6 சதவிகித பணத்தில் இருந்தே உதவிகளை செய்ய வேண்டியிருப்பதாக புள்ளிவிவரங்களை கூறியிருந்தார் ஜெயகுமார். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் வேண்டுகோளை மீறி போராடக் கிளம்பிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நாளை போராட்டத்திற்காக சென்னைக்குள் நுழையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் கைது செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் வின்செண்ட் பால்ராஜ் தெரிவிக்கையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தவறான புள்ளி விவரங்களை அளித்துள்ளார். ஆசிரியர்களுக்கு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரை ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளார். உண்மையில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை முடக்கும் வகையில் போலீசார் ஆசிரியர்களையும், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளையும் போலீஸ் நிலையங்களில் வைத்திருப்பது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார்.

 

×Close
×Close