ஜாக்டோ ஜியோ போராட்டம் : 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 7 நாட்களாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கம் (ஜாக்டோ ஜியோ) சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்ததோடு மட்டுமன்றி, அவர்களை பணியிடை நீக்கம் செய்து, அப்பதவிகளுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும் அறிவித்தது.
ஜாக்டோ ஜியோ போராட்டம் - உயர் நீதிமன்ற விசாரணை
இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது ஜாக்டோ - ஜியோ வழக்கு. மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் அடங்கிய அமர்வு விசாரணையை மேற்கொண்டது. அதில் “ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், போராட்டத்தை நிறுத்திவிட்டால் தான் அவர்களுக்கு ஆதரவாக அரசு முடிவெடுக்க்கும்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தமிழக அரசும், ஜாக்டோ - ஜியோவும் பேசி ஒரு முடிவிற்கு வரவேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
மேலும் படிக்க : ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்து என்ன ?
இன்று காலையோடு முடிந்த கால அவகாசம்
இந்நிலையில் இன்று காலை 9 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும் என்று காலக்கெடு விதித்திருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் தங்களின் பள்ளிகளுக்குச் செல்லவும், அதற்கு முன்பு மாவட்ட கல்வி அலுவலர்களிடம் அவர்களின் வருகையை அறிவிக்கவும் கேட்டக்கொள்ளப்பட்டுள்ளனர்.நேரிலோ, வாட்ஸ்ஆப், எஸ்.எம்.எஸ் மூலமாகவோ தங்களின் வருகை குறித்து அறிவித்துக் கொள்ளலாம்.
போராட்டத்தில் ஈடுபட இருக்கும் தலைமைச் செயலக ஊழியர்கள்
ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை நிர்வாக ஊழியர்கள், நீதித்துறை ஊழியர்கள் தங்களின் ஆதரவினை ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு அளித்திருந்த நிலையில், தலைமைச் செயலக ஊழியர்கள் (ஜனவரி 30 அன்று) நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தையும், பிப்ரவரி 1 முதல் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார் தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் அந்தோணிசாமி.
தமிழகத்தில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் அறிவித்துள்ளார். மேலும், 21 சங்கங்களை உள்ளடக்கிய ஜாக் - ஜியோ அமைப்பில் அரசு ஊழியர்கள் மட்டும் உறுப்பினராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை என பள்ளிக்கல்வித்துறை மீண்டும் கெடு விதித்துள்ளது.
இதை மீறும் பட்சத்தில் தொடர்ந்து போராடும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் சரியான விளக்கம் அளிக்காவிடில் டிஸ்மிஸ் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், 90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பேச்சுவார்த்தை நடத்தாத வரை பணிக்கு திரும்ப முடியாது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர், 'முதல்வர் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்' என்று திட்டவட்டமாக தெரிவித்ததாக ஜாக்டோ-ஜியோ தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், இரவு 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் உங்கள் பணியிடம் காலியாகும் என பள்ளிக் கல்வித்துறை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோவுக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது. போராட்டத்தில் ஈடுபடும் தலைமைச்செயலக ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.