போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்த கோரிக்கையை ஜாக்டோ ஜியோ நிராகரித்த நிலையில், திட்டமிட்டபடி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண் 243 ஜ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமிப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். அதன்பிறகு பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை அவர் பட்டியலிட்டு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலைமை சரியான உடன் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கோரிக்கைகளை ஏற்பதா? வேண்டாமா? என்பது பற்றி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனையின் முடிவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ அமைப்பு ஏற்க மறுத்துள்ளது.
மேலும் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. “திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். எனவே நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் போராட்டம் என்பது வாபஸ் பெறப்படும். முதற்கட்டமாக நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். அதன்பிறகு திட்டமிட்டபடி பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும்” ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.