ஜாக்டோ கூட்டமைப்பில் ஒரு சங்கம் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இன்னொரு சங்கத்தை மட்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டி.என்.எஸ்.இ ஜாக்டோ, ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள டி.பி.ஐ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. ஆனால், போராட்டத்தை அறிவிக்காத டி.என். ஜாக்டோ என்ற சங்கத்தை பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அறிவொளி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது: விரைந்து செயல்பட்ட தமிழக அரசு : முடிவை மாற்றிக்கொண்ட உயர்நீதிமன்றம்
இந்தநிலையில், டி.என்.எஸ்.இ ஜாக்டோ சங்கம் அறிவித்துள்ள போராட்டம் முழு வெற்றி பெறும் என மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத் தலைவர் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தரப்பு சங்கத்தை மட்டும் பள்ளிக் கல்வித் துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கையால் எங்கள் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைத்து விட முடியாது என்றும் அவர் கூறினார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, கட்சி ஆட்சி பேதமின்றி நாங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். அந்தவகையில் தற்போது ஆசிரியர் சங்க கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சங்கங்களை பிளவுப்படுத்தும் நோக்கில், ஒரு அமைப்பின் பெயரை குறிப்பிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது வருத்தமானது. எங்கள் சங்கங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம், பள்ளிக் கல்வி இயக்குனர் பொறுப்பேற்றவுடன், ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த கடிதம் அளித்தோம். ஆனால், எங்களுக்கு முன்பே தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கமான டிக்டோ ஜாக் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது. தற்போது இயக்குனர் எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார். நாங்கள் யாருக்கும் போட்டி இல்லை. எந்தச் சங்கத்தையும் உடைக்கவில்லை. அதேநேரம் 28 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று டி.என்.ஜாக்டோ தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், போராட்டம் நடத்தவும் ஒரு மாதம் முன்பே பள்ளிக் கல்வி இயக்குனரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அதன்படி, போராட்டம் அறிவித்திருக்கும்போது, ஆளும் கட்சிக்கு ஆதரவான அமைப்பை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது, இந்த விஷயத்தில் பள்ளி கல்வி இயக்குனர் அரசியல் செய்ய தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. வருகின்ற 28 ஆம் தேதி திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என டி.என்.எஸ்.இ ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வி இயக்குனர், கோரிக்கைகள் குறித்து முதலில் கடிதம் அளித்த கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மற்ற அமைப்புகளும் கடிதம் கொடுத்துள்ளன. அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கான நேரமும் தேதியும் குறிக்கப்பட்டுவிட்டது. எங்களைப் பொறுத்தவரை எந்த சங்கம், எந்த கூட்டமைப்பு, எந்த கட்சி என்ற வேறுபாடு கிடையாது. எல்லா சங்கத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.