பல்வேறு அம்ச கோரிக்கைகள், ஆசிரியர்களுக்கான தி.மு.க தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புக்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ-ஜியோ) ஏப்ரல் 11-ம் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். இந்தநிலையில் நேற்று (ஏப்ரல் 8) மூன்று அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தங்கள் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பு பிரதிநிதிகள், அரசு ஊழியர்களுக்கு எதிரான நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். அவரின் பேச்சு அரசு ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும். இது எங்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்களால் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் உள்ள நிலையில், அனைத்து அரசு ஊழியர்களையும் பாதுகாக்க இதேபோன்ற சட்டம் தேவை என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தல், பள்ளிக் கல்வி ஆணையர் பதவிக்கு பதிலாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் நியமிக்க வேண்டும். அகவிலைப்படி ஊதிய உயர்வு, கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு மீண்டும் செயல்படுத்த வேண்டும் ஆகியவை அவர்களின் பிற கோரிக்கைகளாக உள்ளன.
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "திமுக தேர்தல் அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தும் இதுவரை அவைகள் நிறைவேற்றப்படவில்லை. நிதியமைச்சர் தனது உரைகளில் அந்த கோரிக்கைகள் எந்த நேரத்திலும் செய்ய முடியாது என்று அடிக்கடி குறிப்பிடுகிறார். ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் மௌனமாக இருந்து வருகிறார்.
அமைச்சர்கள் எங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்த நிலையில், ஏப்ரல் 11-ம் நடக்கவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“