Advertisment

ஸ்டாலின் அளித்த உறுதியை நம்பி போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ ஜியோ அன்பரசு அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பிப்ரவரி 15-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Anbarasu Jacto Geo

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பல்வேறு கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பிப்ரவரி 15-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு,  ஜாக்டோ ஜியோ அமைப்பினர், வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

Advertisment

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பிப்ரவரி 15-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும், பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தயாராகி வந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினரை அழைத்து அமைச்சா்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

மேலும், அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதிநிலை சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். 

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கோரிகையை நிராகரிப்பதாக தெரிவித்ததுடன், பிப்ரவரி 15-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தயாராகி வந்தார்கள். ஜாக்டோ ஜியோ அமைப்பினர், நாளை பெரிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி அதை சட்டப்பேரவையிலும் எதிரொலிக்க வைக்க திட்டமிட்டுவந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு உள்ளிட்ட நிர்வாகிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து சந்தித்துப் பேசினார். அப்போது,  ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார். இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு,  “தமிழகத்தில் இருக்கக்கூடிய லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுடைய வாழ்வாதார உரிமையை மீட்பதற்காக உருவாக்கப்பட்ட, ஜாக்டோ ஜியோ என்ற பேரமைப்பு கடந்த 7 ஆண்டுகளாக தன்னுடைய வாழ்வாதார உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டது. கடந்த தேர்தலுக்கு முன்னதாக, இன்றைக்கு முதல்வராக இருக்கக்கூடிய, ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில், கடந்த அரசு பறிப்பதற்கு ஏதுமே இல்லாத அளவிற்கு, உங்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட பின்புலத்தில், கழக அரசு அமைந்தது என்றால், எங்களுடைய கோரிக்கைகள் அத்தனையும், வாழ்வாதார பென்ஷன், பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்குவோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்தார். அதன் அடிப்படையில், இந்த மூன்றாண்டு காலத்தில் நான்காவது பட்ஜெட் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. எனவே, இந்த மூன்றாண்டு காலத்தில் நான்காவது பட்ஜெட் நடக்கும்போது, எங்களுடைய வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று சொல்லி, பலகட்ட போராட்டங்களை அறிவித்திருந்தோம். கடைசியாக நாளைய தினம் (15.02.2024) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை நிறுத்தி, அடுத்து வரக்கூடிய பிப்ரவரி 26-ம் தேதி முதல் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்த பின்புலத்தில், முதலமைசர் மு.க. ஸ்டாலின் மூன்று மூத்த அமைச்சர்களைக் கொண்டு, நேற்றைய தினம் ஜாக்டோ ஜியோவில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். எங்களுடைய கோரிக்கைகள் அத்தனையையும் உள்வாங்கிக்கொண்டு, முதல்வருடைய கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என்று சொன்னார்கள். முதல்வருடைய கவனத்துக்கு மூன்றாண்டு காலம் பலமுறை சொன்னாலும், மீண்டும் மீண்டும் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மூன்று அமைச்சர்களைப் பேசவைத்த நல்லெண்ணத்தின் அடிப்படையில், மீண்டும் தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோவை அழைத்து, வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றோ அல்லது யதார்த்த களச் சூழல் என்னவோ, அல்லது நிதிநிலை குறித்து எங்களை சந்தித்துப் பேசும்போதுதான், எங்கள் போராட்டத்தை மறுபரிசீலனை பண்ணுவோம் என்று கூறினோம். 

அதன் அடிப்படையில், இன்றைக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே, ஜாக்டோ ஜியோவினுடைய 30 ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரச் சொல்லி, பேசினார். உங்களுடைய கோரிக்கைகளின் நியாயங்களை 3 அமைச்சர்கள் என்னிடம் தெளிவாக தெரிவித்தார்கள். நீங்களும் சொல்லலாம் என்றார். அந்த அடிப்படையில் சொன்னோம். தமிழக முதல்வர் நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன பழைய பென்ஷனை கழக அரசு வந்தால் வழங்குவேன் என்று சொன்னதை நாடு முழுவதும் பல மாநிலங்கள் அறிவித்துவிட்டார்கள்.  தேர்தல் அறிக்கையில் சொன்னதை பழைய பென்ஷன் திட்டத்தை பல மாநிலங்கள் அறிவித்தபோது, இன்றைய முதல்வர்புன்முறலோடு சொன்னார்,  ‘நான் தராமல் யார் தரப்போகிறது, நிச்சயமாக பழைய பென்ஷன் விரைவில் வழங்கப்படும்’ என்றார். அதேபோல கலைஞர் எங்களுக்கு வழங்கப்பட்ட சரண் விடுப்பை கடந்த அரசு ஆண்டுக்கு ஒரு முறை ஒத்தி வைத்தது. ஆனால், கழக அரசு வந்த பிறகு மறு உத்தரவு வரும் வரை கிடைக்காது என்பது நியாயம் இல்லை என்றோம். அதற்கு அவர், உங்களுக்கு தெரியாதது அல்ல, மிக விரைவில் நிதிநிலை சீரடைந்த பிறகு நிச்சயமாக உங்களுடைய கோரிக்கைகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படும், அந்த நம்பிக்கையோடு நீங்கள் திரும்ப வேண்டும் என்று சொன்னார். நாங்களும் ஜாக்டோ ஜியோவில் பேசினோம், கடந்த 10 ஆண்டுகளில் பேசாத முதல்வர், பத்தாண்டுகளுடைய கோரிக்கை இன்றைக்கு ஒவ்வொன்றாக அறிவிக்கவில்லை என்றால்கூட எங்களுடைய அகவிலைப்படி பல்வேறு அம்சங்கள் குறித்து, தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்று எங்களுக்கு ஒரு உறுதியைச் சொன்னார். நான் உங்களுடைய கோரிக்கைகளை மறக்கவில்லை, மறைக்கவில்லை, மறுக்கவும் இல்லை என்றார். அதை நாங்கள் இன்றைக்கும் சொன்னோம், நீங்கள் சொன்ன அந்த மறக்கவில்லை. மறைக்கவில்லை. மறுக்கவில்லை என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், மறக்காமல் பண்ண வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுத்தோம். நிச்சயமாக நான் பண்ணாமல் யார் பண்ண போகிறது, நம்பிக்கையோடு இருங்கள், மிக விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். அந்த அடிப்படையில் நாங்கள் இவ்வளவு நேரம் விவாதித்ததில் மீண்டும் நாங்கள் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறோம். முதல்வர் எங்களை நம்பி அப்படிச் சொன்னது, ஒரு முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற அந்த நம்பிக்கை நீர்த்துப் போகவில்லை. நிச்சயமாக நம்புகிறோம, நிச்சயமாக நீங்கள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், கடந்த முறை மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது எங்களுடைய அகவிலைப்படியை நிலுவையோடு வழங்கிய தமிழக முதல்வர், 19-ம் தேதி இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பாக, அறிவிப்புகளில், ஏதேனும் அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் இந்தப் போராட்டத்தை, நாளை நடக்கக்கூடிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை நல்லெண்ணத்தின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைத்து மீண்டும் முதல்வரோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிமைகளை மீட்க முடியும் என்ற நம்பிக்கையோடு நாளைய போராட்டம் ஒத்தி வைப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jacto Geo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment