பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு நடத்த உள்ள வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் விசாரணையை நாளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், கஜா புயல் பாதிப்பால் தங்களுடைய போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு உத்தரவாதம் அளித்திருந்தது.
ஆனால், ஜாக்டோ ஜியோ கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, உத்தரவாதத்தை திரும்பப் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர், நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மீண்டும் அறிவித்தது.
இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மாணவர் கோகுல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது, '+2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல் துவங்க உள்ள நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவர்' என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி வாதிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இரு நீதிபதிகள் அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனி நீதிபதி எப்படி தலையிட முடியும் என நீதிபதி ராஜா கேள்வி எழுப்பினார்.
மதுரைக் கிளையில் உள்ள வழக்குக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நவீன்குமார் தெரிவித்தார்
மேலும், காலையில் முறையிட்டு விட்டு, எதிர்தரப்பு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கேட்ட நீதிபதி, மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.