jacto-geo | ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.15ல் ஒருநாள் அடையாள போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் இன்று ஜாக்டோ ஜியோ கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.
அதன்படி பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாளப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 26 ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
அதன்பின்னரும் ஏதும் நடவடிக்கை இல்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட மனுவில், “தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்களின் உணர்வுகளை, உரிமைகளை அவை கொடுக்கப்பட வேண்டியதன் நியாயங்களை நன்கு அறிந்தவராக இருந்ததுடன், நாங்கள் நடத்திய கூட்டங்கள், மாநாடுகளிலும் பங்கேற்று, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் குரல் கொடுத்து எங்கள் நம்பிக்கை நாயகராக திகழ்ந்தார்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் 2021 தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான உரிமைகள், சலுகைகள் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். குறிப்பாக புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்தார். சொன்ன சொல் காப்பவர் என்ற திடமான நம்பிக்கையில், திமுக வெற்றி பெற பெரும்பங்காற்றினோம்.
அதன்பின் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க 14-ம் மாநில மாநாடு, ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடுகளில் பங்கேற்ற முதல்வர், எந்த அறிவிப்பும் செய்யாமல், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தவற்றை நிச்சயம் நான் செய்வேன் என்று சொல்லிச் சென்றார். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் உரிமைகளை போராடி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“