முதல்வரின் கோரிக்கை நிராகரிப்பு... திட்டமிட்டப்படி 4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைத்து டிசம்பர் 5ம் தேதி வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு புதிய ஓய்வு ஊதியம் முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்கு பிறகு வழங்கப்படாமல் இருக்கும் 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

இதை நிறைவேற்றக் கோரி, வருகிற 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர். இது தொடர்பாக சென்னையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் போராட்ட விளக்கம் கூட்டம் நடத்தி அதில் நிர்வாகிகள் கோரிக்கை தொடர்பாக பேசினர்.

இந்த நிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் தமிழக அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அரசு தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, இன்று திருவல்லிக்கேணியில் ஜாக்டோ-ஜியோவின் உயர் மட்டக்குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி டிசம்பர் 4 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என்ற அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை வைத்து டிசம்பர் 5ம் தேதி வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close