ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர், உயர்மட்டக்குழு உறுப்பினர்களின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்களான சங்கர், குமார் மற்றும் இளங்கோ ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் இணைந்த பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேட்டியளித்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்; லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஒன்று திரண்டு ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழக முதல்வரை அழைத்து பிரம்மாண்ட நம்பிக்கை மாநாட்டினை நடத்தினோம். அதில் முதல்வர் பேசுகையில், எங்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். ஆனால், அவர் உறுதியளித்ததுபடி ஓராண்டு கடந்தும் பழைய ஓய்வூதிய திட்டம், கொரோனா காலத்தில் பணி சரண்டருக்கு பணப்பலன் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இன்று வரை நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம்.
/indian-express-tamil/media/post_attachments/5c212b09-7f2.jpg)
இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர்களும், அதிகாரிகளும் எங்களை பலமுறை அழைத்துப் பேசினர். படிப்படியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். ஆனால், ஆண்டுகள் உருண்டு ஓடியதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லை. அரசுக்கு பலமுறை சந்தர்ப்பம் கொடுத்தும், ஆண்டுக்கணக்கில் காத்திருந்தும் எந்த பலனும் இல்லை.
அதேபோல், சென்னையில், ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டத்தின் போது மிரட்டி, வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டமைக்காக தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவிக்கின்றோம்.
எங்களின் கோரிக்கைகளை நினைவூட்டும் வகையிலும், அதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் முதற்கட்டமாக நவம்பர் 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டமும், 2-ம் கட்டமாக நவம்பர் 15 - 24-ம் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சார இயக்கமாக கோரிக்கைகளை முன்வைத்து குரல் எழுப்புவதும், 3-ம் கட்டமாக நவம்பர் 25ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு மறியல் போராட்டம் நடத்துவது என்றும், 4-ம் கட்டமாக இறுதியாக டிச-28ம் தேதி சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு கோட்டையை முற்றுகையிட்டு அரசை ஸ்தம்பிக்கச்செய்யும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கின்றோம்.
/indian-express-tamil/media/post_attachments/b4ad99d4-6d5.jpg)
தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகளாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தள்ளி வருகின்றனர், ஆனால் நிறைவேற்றப்படவில்லை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போராட்டத்தில் ஈடுபட இந்த அரசு திணித்துள்ளது என்றனர்.
தி.மு.க தலைமையிலான அரசு எப்போது வந்தாலும் அந்த அரசுக்கு பெரும்பான்மை ஆதரவை அளித்து வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இப்போது ஒன்று திரண்டு தி.மு.க தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கி அரசை ஸ்தம்பிக்க வைக்க இருப்பதாக கூறுவது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கின்றது.
முன்னதாக, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டாததால் இந்தப் போராட்டத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்கின்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்.
ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் சு.குணசேகரன், மாநில பொருளாளர் சே.நீலகண்டன் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“