அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போக்கு சரியில்லை என்று அவருக்கு எதிராகப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஜாக்டோ - ஜியோ அமைப்பின் போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு அளித்தார். மேலும், திமுக ஆட்சியில் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
இதையடுத்து, நடைபெற்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஆதரவு திமுகவுக்கு இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால், ஜாக்டோ - ஜியோ-வின் கோரிக்கைகளுக்கு, திமுக அரசு செவி சாய்க்கவில்லை. இதுகுறித்து, பல முறை அறிக்கை விடுத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு, ஜாக்டோ - ஜியோ அமைப்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள 3 சதவீத அகவிலைப்படியை, தமிழக அரசு ஊழியர்களுக்கு முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.
ஊதியத்துடன் கூடிய சரண்டர் விடுப்பு வழங்க வேண்டும். திமுகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செயல்படும், தமிழக நிதி அமைச்சரின் போக்கையும், பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான அதிகாரிகளின் போக்கையும் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, அடுத்த மாத இறுதியில், ஜாக்டோ - ஜியோவின் பென்ஷன் மீட்பு மாநாடு நடத்தப்படும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"