பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அமைப்பு செய்தி தொடர்பாளர் தியாகராஜன் அறிவித்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள பிரச்சனையில் தீர்வு, சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து கடந்த சில நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் நேற்று முழுவதும் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தப் போராட்டத்தில், நேற்று மதியம் வரை 4 ஆயிரம் நபர்கள் கைது செய்யப்பட்டனர். பிறகு நாள் இறுதியில் மொத்தமாக 7,600 நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்தவர்களை ஆங்காங்கே இருக்கும், பள்ளி, மண்டபம் மற்றும் பல்வேறு இடங்களில் அடைத்து வைத்தனர்.
சென்னை போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் அனைவரையும் நேற்று இரவு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 10 அளவில் அமைப்பின் இந்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவித்தனர். மேலும் அடுத்தகட்ட போராட்டத்தை வரும் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
ஜாக்டோ ஜியோவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 20ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.