/indian-express-tamil/media/media_files/zqEOjT42RAT3Hp7Zhkab.jpg)
ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய வழக்கறிஞர்கள், ஜாபர் சாதிக்கை என்.சி.பி அதிகாரிகள் வேறொரு குற்றவாளி வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை 7 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க பாட்டியாலா உயர் நீதிமன்றம் என்.சி.பி-க்கு சனிக்கிழமை (09.03.2024) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தந்தி டிவி-க்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: “15.02.2024 அன்று கிட்டத்தட்ட 50 கிலோ சூடோபெட்ரைன் என்கிற போதை பொருளை டெல்லி என்.சி.பி பறிமுதல் செய்திருக்கிறார்கள். அது தொடர்பாக 3 பேர்களை கைது செய்து இருக்கிறார்கள். அந்த 3 பேரிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் இன்று (09.03.2024) ஜாபர் சாதிக்கை கைது செய்திருக்கிறார்கள். அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள். அப்படி ஆஜர்படுத்தும் போது நாங்கள் அவருடைய வழக்கறிஞர்களாக நீதிபதியிடம் இந்த 50 கிலோ சூடோபெட்ரைன் என்.சி.பி சட்டத்தில் வரவில்லை, அது போதைப் பொருள் இல்லை என்று கூறி அவருக்கு உடனே ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டோம். இதற்கு நீதிபதி, என்.சி.பி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். இந்த வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள். ஜாபர் சாதிக்கிடம் இருந்து எந்த ஒரு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை நாங்கள் அழுத்தமாக கூறினோம். என்.சி.பி நீதிபதி இல்லாததால், இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி பொறுப்பு நீதிபதி என்பதால், அவரை நாங்கள் இப்போதைக்கு நீதிமன்ற காவலில் வைக்கிறோம். நீங்கள் உங்களுடைய எந்த வாதமாக இருந்தாலும் ஜாமீன் கோரும்போது வாதிடுங்கள். அதற்குப் பிறகு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யும் என்று கூறினார். அது இல்லாமல் என்.சி.பி தரப்பில் 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டார்கள். நாங்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறினோம். அவரிடம் விசாரிப்பதற்கு எதுவுமே இல்லை, அவர் நிரபராதி என்று நாங்கள் கூறினோம். அப்போது நீதிபதி, நீங்கள் ஏழு நாள் காவல் வைத்துக் கொள்ளலாம் என்று என்.சி.பி போலீசிடம் கூறி உத்தரவிட்டார். என்.சி.பி அதிகாரிகள், ஜாபர் சாதிக்கின் அடிப்படை உரிமைகளை மீறி இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினர் வயதான பாட்டி, அவருடைய மனைவி, அவருடைய 2 மைனர் மகள்கள், ஒரு மகன் என அனைவரையும் சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்” என்று ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.