டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழ் மொழி திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போதைப் பொருள் வழக்கில் தற்போது அமலாக்கத் துறையும் களமிறங்கி உள்ளது. ஜாபர் சாதிக் வீடு அவர் தொடர்புடைய இடங்கள், அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களிலும் இன்று காலை (ஏப்ரல் 9) முதல் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு ஜாபர் சாதிக் உடன் நெருக்கிய தொடர்பில் இருந்து இயக்குநர் அமீரின் அலுவகலத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. தியாகராய நகர், ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறை உதவி இயக்குநர் தலைமையில் 6 அதிகாரிகள் கொண்ட குழுவினர் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் இணைந்து அமீர், இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை தயாரித்து வந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தனர்.
துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெறுகிறது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2-ம் தேதி அமீர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பபட்டது. அதன்படி அவர் ஆஜரான அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து தற்போது அவரின் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது.
மேலும், மயிலாப்பூர் சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் வழக்கின் அடிப்படையில் சென்னையில் இன்று இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.
ஜாபர் சாதிக்கு நேரடியாக சொந்தமாக இருக்க கூடிய புரசைவாக்கத்தில் உள்ள ஜெ.எஸ்.எம், புகாரி ஓட்டலில் சோதனை நடைபெறுகிறது. காலை 6.30 மணி முதல் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து சென்னை கொடுங்கையூரில் உள்ள ரகு என்பவரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. . ரகு என்பவர் ஜாக்கி என்னும் திரைப்படத்திற்கு அக்கவுண்டென்ஸ் வேலை பார்த்து வருவதாக தகவல். கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் ரோட்டில் உள்ள ஷேக் முகமது நிசார் என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
புகாரி ஓட்டல் உரிமையாளரின் நீலாங்கரை வீட்டிலும் சோதனை எனத் தகவல் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“