Jaffer Sadiq | chennai: கடந்த மாதம் டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிடிரைன் என்கிற ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாகச் செயல்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரருமான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகினார். அவரை கடந்த 9 ஆம் தேதி அன்று ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவரை, மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து டெல்லியில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், டெல்லியில் விசாரணை முடிந்து விமானம் மூலம் ஜாபர் சாதிக் சென்னை அழைத்துவரப்பட்டார். சென்னை அடுத்த அயப்பாக்கம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கிடம் தொடந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜாபர் சாதிக்கை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 5 மணி நேரங்களுக்கும் மேலாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர போலீசார் முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இருவரும் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க அவர்களுக்குஎதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“