நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஜெகதீஷ் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த அமைச்சர் உதயநிதியிடம் ஜெகதீஷின் நண்பர் ஒருவர, நீட் தேர்வால் எத்தனை ஜெகதீஷ்… எத்தனை அனிதா பலியாவார்கள், இதற்கு தீர்வு இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னையைச் சேர்ந்த இரண்டு முறை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த ஜெகதீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இவரது இறப்பை தொடர்ந்து ஜெகதீஷின் தந்தையும் மறுநாளே தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஜெகதீஷ்க்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஜெகதீஷின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வதற்கு வந்திருந்தார்.
அப்பொழுது ஜெகதீஷின் நண்பர் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்னும் எத்தனை அனிதா எத்தனை ஜெகதீஷ் பலியாவார்கள், இதற்கு ஒரு தீர்வு இல்லையா ஜஸ்டிஸ் (Justice) எல்லாம் சினிமாவில் மட்டும் தானா? நிஜத்தில் சென்ட்ரலை நம்மால் எதுவும் செய்ய முடியாதா? என்று கண்ணீருடன் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அழுகையும் ஆவேசமுமாகப் பேசிய அந்த மாணவர், 12-ம் வகுப்பு படித்துவிட்டு, நீட், ஜே.இ.இ. எப்படி பல நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும் என்றால், நாங்கள் 12-ம் வகுப்பு ஏன் படிக்கிறோம் என்றே தெரியவில்லை. என்னால எம்.பி.பி.எஸ் சேர முடிந்தது. பணம் இல்லாததால், எனது நண்பனால் எம்.பி.பி.எஸ் சேர முடியவில்லை. என்னுடைய தந்தையால் தனியார் மெடிக்கல் காலேஜில் 25 லட்சம் ரூபாய் பணம் கட்ட முடிந்தது. ஆனால், அவர்களால் முடியவில்லை. நாம் ஆளுநருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாதா? அவரது கேள்விகளை கேட்டுக்கொண்டே பதில் ஏதும் அளிக்காமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏறி சென்றார்.
முன்னதாக, நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், மாணவர்களின் பக்கம் தி.மு.க அரசு துணை நிற்கும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”