Today Tamil News : ஈஷா அறக்கட்டளையின் தலைவர் ஜக்கி வாசுதேவ், இந்து கோயில்களை மீட்டெடுப்போம் என பரப்புரை செய்து வருவது, அரசியல் களத்தில் பேசு பொருளாகி உள்ளது. பராமரிப்பின்றி பல இந்துக் கோயில்கள் சிதலமடைந்து கிடப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஜக்கி வாசுதேவ், இந்து கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்குமாறு கூறி வருகிறார்.
ஜக்கியின் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, 'தெய்வத் தமிழ்ப் பேரவை' என்ற அமைப்பின் ,மூலம், ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பெ.மணியரசன், சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார். மேலும், மே மாதம் 8-ம் தேதி போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
மணியரசனின் இந்த அறிவிப்பை அடுத்து, ஈஷா மையத்தின் ஆதரவாளர்கள் பலர் தன்னை போனில் தொடர்பு கொண்டு மிரட்டுவதாகவும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும் கூறி வருகிறார். சமூக வலைதளங்களில் மணியரசன் குறித்து வெளியாகும் வதந்திகளில் அவரின் வீட்டு முகவரி இடம்பெற்றிருப்பதாகவும், அவர் கிறுத்தவ மதத்தை சார்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதால், நேற்று இரவு தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனுவை மணியரசன் அளித்துள்ளார். அந்த மனுவில், அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுமார் 40,000 கோயில்களை, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜக்கி போராட்டம் நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அறநிலையத்துறை நிர்வாகத்தில் பிழை இருந்தால், அதனை சுட்டிக்காட்டி பிரச்னைகளை சரி செய்யலாம். அதை விடுத்து, தனியாரிடம் கோயில்களை ஒப்படைக்க ஈஷா மையம் தெரிவித்து வருவதை கண்டித்து, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதால் என் மீது ஆத்திரமடைந்த ஈஷா மைய ஆதரவாளர்கள், கடந்த இரு நாள்களாக விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் மரபு வழி இந்துவாக இருந்தாலும், என்னை கிறுத்துவர் என்றும், என் பெயர் ‘டேவிட்’ சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, இரு தரப்புக்கும் ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வரும் நிலையில், போராட்டம் அன்று ஈஷா அறக்கட்டளை சார்பாக முக்கிய அறிவிப்புகள் வெளி வர இருப்பதாக, மணியரசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”