ஜெய் பீம் சர்ச்சை: அன்புமணிக்கு பதிலளித்த சூர்யா; தலைவர்கள் நெட்டிசன்கள் ரியாக்ஷன்ஸ்

முன்னதாக, பாமகவின் சார்பில் அன்புமணி ராமதாஸ் எழுதியிருந்த கடிதம் – படத்திற்கு தவறான நோக்கம் கற்பிப்பதாக அமைந்திருந்தது. அதனை மறுத்திருப்பதுடன், சூர்யாவின் கடிதம் சமூக பொறுப்புள்ள சினிமா தயாரிப்பாளரின் குரலாக எழுந்துள்ளது – சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து.

Jai Bhim Controversy, Jai Bhim movie, Jai Bhim movie controversy, Suriya, actor Suriya, Anbumani, Sarathkumar, ஜெய் பீம், ஜெய் பீம் சர்ச்சை, சிபிஎம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், அன்புமணி, சரத்குமார், கே பாலகிருஷ்ணன், ஜி ராமகிருஷ்ணன், communist party of india marxist, CPI M, K Balakrishnan, G Ramakrishnan, Jai Bhim, Tamil news, Rajakannu, Jai Bhim, Chadru, Justice Chandru

இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், வன்னியர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பும் எழுந்தது.

ஜெய் பீம் திரைப்படத்தில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணுவை போலீஸ் லாக்அப்பில் சித்திரவை செய்து கொலை செய்த போலீஸ் எஸ்.ஐ-க்கு குருமூர்த்தி என்று பெயர் வைத்ததும், அவருடைய வீட்டில் வன்னியர்களின் அக்னி கலசம் காலெண்டர் இடம்பெற்றதற்கும் வன்னியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சர்ச்சையானது. மேலும், குருமூர்த்தி என்ற பெயர் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் பெயரைக் குறிப்பதாக சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஜெய் பீம் படக்குழுவினர் படத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அக்னி கலசத்தை அகற்றி லட்சுமி படத்தை வைத்தனர்.

இதன் மூலம் ஜெய் பீம் திரைப்படத்தின் வன்னியர்கள் சுட்டிக்காட்டிய அக்னி கலசம் நீக்கப்பட்டதால் சர்ச்சை முடிவுக்கு வந்தது என்று கருதிய நிலையில், பாமக இளைஞரணி செயலாளரும் மாநிலங்களவை எம்.பி-யுமான அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி ஒரு திறந்த கடிதம் எழுதினார். அதில், சூர்யா, ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் வன்னியர்கள் மீது சாதிவெறி இழிவை சுமத்தி இருப்பதாகவும் படைப்புச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

அன்புமணி எழுதிய கடிதத்துக்கு பதிலளித்து நடிகர் சூர்யா கடிதம் எழுதினார். அதில், “மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு. வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி .

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது ” என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு . பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம் .

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது . இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம் .

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை, உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட’ பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை, அநீதிக்கு’ எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், ‘ பெயர் அரசியலால் ” மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும் , சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் . தங்கள் புரிதலுக்கு நன்றி” என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

அன்புமணியின் கடிதத்துக்கு சூர்யா பதில் அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்களும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜி.ராமகிருஷ்ணன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஜெய்பீம் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ள நடிகர் சூர்யா, அதிகாரத்திற்கு எதிராக ஒரு சிறு கேள்வியாகவே அந்த படம் உருவாக்கப்பட்டது என்பதை தன்னுடைய கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

முன்னதாக, பாமகவின் சார்பில் அன்புமணி ராமதாஸ் எழுதியிருந்த கடிதம் – படத்திற்கு தவறான நோக்கம் கற்பிப்பதாக அமைந்திருந்தது. அதனை மறுத்திருப்பதுடன், சூர்யாவின் கடிதம் சமூக பொறுப்புள்ள சினிமா தயாரிப்பாளரின் குரலாக எழுந்துள்ளது.

உலகமே பாராட்டும் விதமாக, காவல்நிலைய படுகொலைகளுக்கு எதிரான பொது உணர்வாக வெளியாகியிருப்பதுதான் ஜெய்பீம் திரைப்படம் ஆகும். அந்த படத்தின் அடிப்படையாக அமைந்த உண்மை நிகழ்வில், ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும் பல ஆண்டுகள் போராடியுள்ளனர்.

படத்தில் காட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் சந்துரு, போலீஸ் அதிகாரி பெருமாள்சாமி போலவே, வழக்கறிஞர் வெங்கட்ராமன் உட்பட பலரும் சட்டப்போராட்டத்தில் கைகோர்த்து நீதியை வென்றார்கள். இந்த திரைப்படம், உண்மை நிகழ்வின் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

அதே போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மதிப்பிற்குரிய திரைக்கலைஞர் சூர்யா அவர்களுக்கு வணக்கம்.

அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தங்களின் நடிப்பும், இதர கலைஞர்களின் நடிப்பும் மிகச்சிறப்பான முறையிலும் மக்களை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. மேலும் ஒரு உண்மைக் கதையை மிகவும் உயிர்ப்போடும், நிகழ்வுகளை நீர்த்துப்போகாமல் முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலும் இயக்கிய அதன் இயக்குநர் த.சே.ஞானவேல் அவர்களின் உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.

ஜெய் பீம் திரைப்படத்தை தயாரித்த தங்கள் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், திரைக்கலைஞரான தாங்கள் முக்கியமான பிரச்சனைகளில் சமூக அக்கறையோடு மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருவதற்கு பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகமெங்கும் மனித உரிமைகள் மீறப்படும் போது அத்தகைய வன்கொடுமைகளில் தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கிறது. அதன் ஒருபகுதியாகத்ததான கம்மாபுரம் சம்பவத்திலும் கட்சியின் தலையீடு அமைந்தது.

இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட குறவர் சமூகத்தை சார்ந்த ராஜாக்கண்ணு மற்றும் அவரது மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்போராட்டங்களையும், சட்ட போராட்டத்தையும் நீண்ட காலம் தொடர்ச்சியாக நடத்தியது. கட்சியின் தொடர்ச்சியான தலையீடு மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக கோரிக்கையில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. ராஜாக்கண்ணுவை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணத்தையும் அரசிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பெற்று தரவும் முடிந்தது. இதனைக் கருப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஜெய்பீம் படத்தின் வெற்றி எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே கருதி பெருமையடைகிறோம்.

பொதுவாக ஒரு உண்மைச் சம்பவம் திரைப்படமாக வெளியாகும் போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே. ஆனாலும் அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.

இவ்வழக்கில் நெஞ்சுறுதியோடு போராடிய ராஜாகண்ணுவின் மனைவி திருமதி பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினர் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் ஒரு ஏழைத் தொழிலாளியாகவே இன்றும் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். சிறப்பானதொரு திரையாக்கத்தின் மூலம் திருமதி பார்வதி போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள திருமதி பார்வதிக்கும் அவர்களை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் இத்தகைய சமூக அக்கறையுடன் கூடிய முயற்சிகள் தொடர்ந்திட மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் ஜெய் பீம் படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெய் பீம் படம் பார்த்தேன், நடந்த சம்பவங்களை, சரித்திர நிகழ்வுகளை மறந்த நிலையில், நீதியரசர் சந்துரு அவர்களின் சமூக அக்கறையை, உலகம் மறந்து விடக்கூடாது என்ற சிறந்த நோக்கத்தோடும், சமூக அநீதிகளை பிரபலங்கள் எந்த ஒரு தயக்கம் இல்லாமல் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற சூர்யாவின் உன்னதமான எண்ணத்தை முதலில் பாராட்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சரித்திரங்கள் மறப்பதற்கு அல்ல. அவை கற்றுக்கொடுக்கும் பாடங்களை உலகறியச் செய்ய வேண்டும் . அப்போதுதான் நல்ல எண்ணங்கள், நாட்டுப்பற்று, சமூக ஒழுக்கம், சமூக நீதி, சமத்துவம் நிலைநாட்டப்படும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் ராசாக்கண்ணுவின் வழக்கும், அவரது மரணமும். நீதியை நிலைநாட்டப் போராடிய அவரது மனைவியும், நீதி தோற்று விடக்கூடாது என்று போராடிய சந்துருவைப் போலவும், பெருமாள்சாமியைப் போலவும் நாட்டில் பலர் தோன்றவேண்டும். நீதி அனைவருக்கும் பொது. இதில் ஏற்றத்தாழ்வு, ஏழை பணக்காரன், சாதி, மத, பேதங்கள் கூடாது என்ற நிலை எப்போது வருகிறதோ அன்று தான் நாடு உண்மையான சுதந்திர நாடு. சிறந்த படைப்பை தந்த சூர்யாவை போற்றுகிறேன், ஞானவேலை வாழ்த்துகிறேன். ராசாக்கண்ணு, செங்கேணி, தமிழ், சூப்பர்குட் சுப்பிரமணி மற்றும் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் சக கலைஞர்கள் அனைவரையும் என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து போற்றுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம், பாஜக

அதே நேரத்தில், பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் ஜெய் பீம் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது’ – அன்புமணிக்கு சூர்யா பதில்!

அதே அன்பான மக்கள், ரசிகர்கள், திரைப்படங்களை விரும்புபவர்கள், உங்கள் எல்லா திரைப்படங்களையும் பார்த்து பெரும் ஆதரவை வழங்குபவர்கள் தான் உங்கள் பொய்யைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள்.

அவர்கள் ஜெய் பீம் படத்தைப் பார்த்தார்கள், சாதியைக் குறிவைக்கும் சில பொய்களைத் தவிர அனைத்தையும் விரும்பினார்கள். இது தான் உண்மை.

அவர்கள் உங்கள் சாதிக்காக உங்கள் ரசிகர்கள் அல்ல.. உங்கள் திறமைக்கும் நடிப்புக்கும் உங்கள் ரசிகர்கள். உங்களுக்கு நான் உட்பட எல்லா ஜாதியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்பதை நினைவில் கொள்ளவும்.” என்று சூர்யாவை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

கனலரசன், மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் மகன்

நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படம் சர்ச்சை குறித்து, மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் மகன் கனலரசன் ஊடகங்களிடம் கூறியிருப்பதாவது: “ஜெய்பீம் திரைப்படத்தை பொறுத்தவரை சூர்யா வெறும் நடிகர் என்பதால் அவர் மீது மட்டும் முழு தவறை கூற இயலாது. அந்த திரைப்படத்தின் இயக்குநர் தான் குற்றஞ்சாடப்பட வேண்டியவர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜெய்பீம் திரைப்படத்தை பொறுத்தவரை அது ஒரு நல்ல படம். அதில் மாற்றுக்கருத்தே எனக்கு இல்லை. ஆனால் அந்தோணிச்சாமி கேரக்டருக்கு குருமூர்த்தி என்ற பெயரை சூட்ட வேண்டியதன் அவசியம் என்ன வந்தது என்பது தான் எங்கள் கேள்வி. இரண்டு சாதிகளுக்குள் சண்டையை உருவாக்க முயன்றிருக்கிறார் ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல். முன்பை போல் இரண்டு சாதிகளுக்குள் நாங்கள் மோதிக்கொண்டிருக்க மாட்டோம். சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியுமோ அந்த நடவடிக்கையை இயக்குநர் ஞானவேல் போன்ற நபர்கள் மீது எடுப்போம்.

நடிகர் சூர்யா நிறைய நல்லது செய்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய பிள்ளைகளை படிக்க வைக்கிறார் என்றும் அறிந்திருக்கிறேன். அதனால், அவரை நல்ல மனுஷனாக தான் நான் பார்க்கிறேன். சூர்யாவுக்கு இதை நான் எச்சரிக்கையாக சொல்லவில்லை, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கி எடுக்கப்பட்டுள்ள இது போன்ற திரைப்படங்களில் நடித்தால் அவர் மீது மக்கள் வைத்துள்ள மரியாதை நிச்சயம் குறைந்துவிடும். இதை நடிகர் சூர்யா சிந்தித்துப் பார்த்து தனது தவறை திருத்திக்கொள்வார் என நம்புகிறேன். இல்லையென்றால் அவரது ரசிகர்களே அவரை மதிக்காத சூழல் உருவாகும்.”

அந்தோணிசாமி என்ற பெயர் கிறிஸ்துவ பெயராக இருப்பதால் அதை சூட்ட இயக்குநர் ஞானவேலுக்கு பயமாக இருந்ததா எனத் தெரியவில்லை. கலசகுண்டலத்தையும், குருமூர்த்தி என்ற பெயரையும் தேவையில்லாமல் ஜெய்பீம் திரைப்படத்திற்கு இயக்குநர் ஏன் கொண்டு வந்தார் என்பதே எனது கேள்வி. எல்லா நேரமும் நாங்கள் பொறுமையாக இருக்கமாட்டோம். இரண்டு சமுதாயத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இயக்குநர் ஞானவேலின் செயல்பாடுகள் உள்ளன.

ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார் சூர்யா. இதனால் அவர் நடிப்பு, பிஸினஸ் என்கிற ரீதியில் பார்க்கிறார். இயக்குநர் ஞானவேல் இனியும் தொடர்ந்து ஒரு சமுதாயத்தை இழிவுப்படுத்த வேண்டும் என நினைத்தார் என்றால் அவர் வீட்டை விட்டு வெளியவே வர முடியாத சூழல் உருவாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாச்சியாள் சுகந்தி, பத்திரிகையாளர்

ஜெய் பீம் சர்ச்சை விவகாரத்தில், பத்திரிகையாளர், நாச்சியாள் சுகந்தி தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “அன்பின் அன்புமணி அண்ணனுக்கு, வணக்கம். மாநிலத்தில் நிலவும் பிரச்சனைகளை பேசாமல் நடிகருக்கு கடிதம் எழுத, அவர் பதில் சொல்ல….ஒரே நாளில் உங்கள் பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுவிட்டது.

நீங்கள் முன்னாள் மத்திய அமைச்சர். மேலும் உங்கள் அரசவை நடவடிக்கைகளை ஐ.நாவே பாராட்டியது என்றெல்லாம் கூறியுள்ளீர்கள்.

நான் சொல்ல வந்தது அதுவல்ல. இன்னமும் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சரியான இடம் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.

வடமாவட்டங்களில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்றால் உங்களுக்கு ஒரு உண்மை தெரிய வரும், பரையர்களும் வன்னியர்களும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பொருளாதார நிலையில் தான் இருக்கிறார்கள் என்று.

அய்யாவின் ஆரம்பகால அரசியலில் பல்வேறு இடதுசாரி அறிஞர்களும் அம்பேத்கரிஸ்டுகளும் இருந்தார்கள். தமிழகத்திந் இத்துனை அம்பேத்கர் சிலைகள் இருப்பதற்கு அய்யாவும் காரணம். மறுப்பதற்கில்லை.

ஆனால் என்றைக்கு அய்யா குற்றப்பின்னணி இருக்கும் ஆட்களுடன் சேர்ந்து தலித் அல்லாதோர் கூட்டணி ஆரம்பித்தாரோ அன்றே உங்கள் கட்சியின் அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவாக இதுவரை பரையர் – வன்னியர் பகைமை ஊருக்குள் விளைந்தது. பல ஆணவக்கொலைகள் நடந்தன. திவ்யா – இளவரசன் விவகாரத்தை அரசியலாக்கி பல ஊர்களை நாசம் செய்தீர்கள்.

அதோடு விட்டீர்களா? ஒரு தலைமுறையையே சாதி வன்மம் பிடித்தவர்களாக மாற்றியுள்ளீர்கள். எதிரொலியாக நீங்கள் கூட கையில் அக்னிசட்டியை பச்சை குத்தியுள்ளீர்கள். இன்னும் நீங்கள் டிக்டாக்கில் நடிக்கவில்லை. அவ்வளவுதான்.

ஒரு கட்சி தலைமையாக, ஒரு தலைமுறையை நாசம் செய்வதா உங்கள் வேலை? வன்னியர்களுக்காக பாடுபடுவது உண்மையெனில் அவர்களின் கல்விக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் சிந்திக்க கட்சியில் இருக்கும் இடதுசாரி சிந்தனையுள்ள அறிஞர்களுடன் விவாதியுங்கள். செயல்படுங்கள்.

இருசாதிகளுக்கு இடையே நீங்கள் வளர்க்கும் பகையை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் ஓட்டாக அள்ளிக்கொண்டு ஆட்சி அமைத்து அவர்கள் ஏழேழு தலைமுறையும் சொகுசாக வாழ சொத்து சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் ஆண்டாண்டு காலமாக வன்னியர்களும் பரையர்களும் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டு உள்ளார்கள்.

அய்யாவுக்கு வயதாகிவிட்டது. ஆகையால் இந்த உண்மையை அதன் அரசியலோடு புரிந்துகொள்வது இயலாது. நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அதுதான் உங்களை நம்பியிருக்கும் வன்னியர்களுக்கு நல்லது.
உங்கள் வழிகாட்டும் குழுவில் இருக்கும் வலதுசாரிகளை அப்புறப்படுத்துங்கள். இல்லையேல் பாமக என்ற கட்சி இல்லாமல் கூட போகலாம். ஆரம்பகால பாமக போல உருமாறுங்கள். அப்போதுதான் கட்சியே பிழைக்கும். நன்றி. இப்படிக்கு, பரையர் – வன்னியர் இணக்கம் நாடும் ஒருத்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jai bhim movie controversy suriya answer to anbumani leaders and netizens reactions

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com