ஜெய் பீம் திரைப்படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால், ஜெய் பீம் படம் எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் என வன்னியர் சங்கம் சார்பில் பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு கடிதம் எழுதியுள்ளார்.
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டதாக வன்னியர் சங்கமும் பாமகவும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், கடந்த 2 வாரமாக பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.
ஜெய் பீம் திரைப்படத்தில், ராஜாக்கண்ணு என்ற இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரை காவல் நிலைய சித்திரவதையில் கொல்லப்படுகிறார். அவருடைய கொலைக்கு வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா நீதி பெற்று தருகிறார்.
ஜெய் பீம் படத்தின் கதை புனைவு என்றும் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என்று படத்தில் குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு காவல் நிலைய சித்திரவதையில் கொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது என்ற விவாதங்கள் எழுந்தன. இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது வாதாடி நீதியைப் பெற்று தந்தார். அவருடைய கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்துள்ளார்.
ஜெய் பீம் திரைப்படத்தில், ராஜாக்கண்ணுவை காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்ற போலீஸ் எஸ்.ஐ கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலெண்டரில் வன்னியர் சங்கத்தின் அடையாளமான அக்னி கலசம் இடம் பெற்றது. ஒரு குற்றவாளி போலீஸ் எஸ்.ஐ வீட்டில் வன்னியர் சங்கத்தின் காலெண்டரை வைத்து வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக வன்னியர் சங்கம் மற்றும் பாமக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. வில்லன் போலீஸ் எஸ்.ஐ.க்கு குருமூர்த்தி என்று பெயர் வைத்திருப்பது மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவை குறிப்பிடுவதாக உள்ளதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜெய் பீம் திரைப்படத்தில் காலெண்டரில் இடம்பெற்ற அந்த காலெண்டர் நீக்கப்பட்டு லட்சுமி படம் வைக்கப்பட்டது. இந்த பிரச்னை இத்துடன் முடிந்துவிட்டது என்று கருதிய நிலையில், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் எழுதினார். அதற்கு சூர்யா எழுதிய பதில் கடிதத்தில் தனக்கும் ஜெய் பீம் படக்குழுவினருக்கும் வன்னியர்களை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
ஆனாலும், ஜெய் பீம் திரைப்படம் குறித்த வன்னியர்களின் எதிர்ப்பும் சர்ச்சையும் ஓயவில்லை. ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டதாகவும் அதனால், நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதோடு, 5 கோடி ரூபாய் இழப்பிடு வழங்க வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனிடையே, பாமக நிர்வாகி ஒருவர் சூர்யாவை உதைத்தால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, அவர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விசிக, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜெய் பீம் படம் சர்ச்சையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் ஜெய் பீம் படம் சர்ச்சை தொடர்பாக நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மறுபுறம், ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. எண்ணிக்கையில் சிறுபான்மையினரான இருளர்களின் வாழ்க்கை நிலையும் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜெய் பீம் திரைப்படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால், ஜெய் பீம் படம் எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் என வன்னியர் சங்கம் சார்பில் பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு கடிதம் எழுதியுள்ளதன் மூலம் இந்த விவகாரத்தில் வன்னியர் சங்கம் அடுத்த நகர்வை எடுத்துள்ளது.
திரைப்பட விழா இயக்குநரகம் தொடர்பான, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரகத்துக்கு எழுத்தப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் ஜெய் பீம் திரைப்படம் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டது. வன்னியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே இடையே வகுப்புவாத கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே சில காட்சிகள் ஜெய் பீம் திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இது ஏற்கனவே தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி படத்தில் வேண்டுமென்றே எழுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.
உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமானது, பட்டியலின ஆணும் அவரது மனைவியும் படும் துயரத்தை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் நோக்கத்திற்காக வேண்டுமென்றே சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
இந்தப் படம் எந்த அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் தகுதியானதல்ல. எனவே ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம் என வன்னியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெய் பீம் படம் எந்த அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் தகுதியானதல்ல. எனவே ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதோ, அங்கீகாரமோ, பாராட்டோ வழங்க வேண்டாம்” என்று ஜெய் பீம் சர்ச்சை விவகாரத்தில் வன்னியர் சங்கம் அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“