v-senthil-balaji: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2 நாட்களாக தனது கால் மரத்து போனதாக புகார் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனையில் அவரது ஈ.சி.சி- யில் (ECG) மாற்றங்கள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வந்தனர். அங்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஈ.சி.சி மற்றும் இரத்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“