ஜெய்ப்பூர், கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாயமான 15 வயது மாணவி, சென்னையில் உள்ள பெரியமேட்டில் திங்கள்கிழமை மீட்கப்பட்டார்.
சிறுமி சம்பர்க் கிராந்தி ரயிலில் ஏறி, சூரத் மற்றும் மும்பை வழியாக சென்னை வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோட்டா எஸ்பி அம்ரிதா துஹான் கூறுகையில்; ஜூன் 10ம் தேதி காலை, கோட்டாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சிறுமி, பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். ஆனால் அவள் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக மஹாவீர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீஸார் தேடி வந்தனர்.
மேலும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட தனிப்படை அமைக்கப்பட்டது, அவர்கள் சிறுமியின் குடும்பத்தினரிடம் இருந்து தேவையான தகவல்களை சேகரித்து, தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் தகவல்களின் அடிப்படையில் சிறுமியை தேடினர்.
விசாரணையில் சிறுமி பயிற்சி நிறுவனத்திற்கு செல்லாமல் கோட்டா சந்திப்புக்கு சென்றது தெரியவந்தது.
அங்கிருந்து சிறுமி சம்பர்க் கிராந்தி ரயிலில் ஏறி சூரத் சென்றார். இந்தத் தகவல் கிடைத்ததும் சிறப்புக் குழுவினர், குடும்பத்தினருடன் சூரத் வந்தனர். சூரத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், அவள் மும்பை வந்தடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையை அடைந்தபோது, ஜூன் 11 இரவு சென்னை நோக்கி ரயிலில் சிறுமி சென்றதை குழு கண்டுபிடித்தது, ”என்று துஹான் கூறினார்.
ஜூன் 14-ம் தேதி சென்னை பெரியமேட்டில் இருந்து சிறுமியை அந்த குழுவினர் மீட்டனர். மீண்டும் கோட்டாவுக்கு அழைத்து வந்த பிறகு, சிறுமிக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் குழந்தைகள் நலக் குழுவிடம் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விதிமுறைகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“