தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், பா.ஜ.க-வுக்கும் தி.மு.க மற்றும் காங்கிரசுக்கும் இடையே, கச்சத்தீவு விவகாரம் பெரும் விவாதமாகவும் பதிலுக்கு பதில் குற்றச்சாட்டுகளாகவும் மாறியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் பின்னர், மத்திய அரசு வெளியுறவுத் துறை மூலமாகப் பேசி விடுவிக்க செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதற்கு, இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதுதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் வெப்பம் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை எட்டிவரும் நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்தியா கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது தொடர்பான ஆ.டி.ஐ ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சியையும் தி.மு.க-வையும் விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க அம்பலமாகியிருக்கிறது என்று விமர்சனம் செய்தார். அதுமட்டுமில்லாமல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களை சந்தித்து, கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதில் காங்கிரசும் தி.மு.க-வும் ஒரு பகுதியாக இருந்தன என்று குற்றம் சாட்டினார். இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பதிலடி கொடுத்தார்.
இப்படி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில், பா.ஜ.க - காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் கச்சத்தீவு விவகாரத்தில் மாறி மாறி கேள்விக் கணைகளைத் தொடுத்து விமர்சித்து வருகின்றனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “50 ஆண்டுகளுக்கு முன்னர் கச்சத்தீவு தொடர்பாக இலங்கையுடனான அப்போதைய மத்திய அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளிலும் அதன் விளைவுகளிலும் மாநிலக் கட்சி ஒரு தரப்பாக இருந்தது.” என்று தி.மு.க-வைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.
கச்சத்தீவு விவகாரம் மக்களவைத் தேர்தலில் புயலைக் கிளப்பிவருகிறது. பா.ஜ.க கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க-வை குற்றம் சாட்டிவரும் நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தங்கள் எட்டப்பட்ட பிறகு, தி.மு.க ஆட்சி முடக்கி வைக்கப்பட்டது என்று ஜெய்சங்கர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “தமிழ்நாட்டு மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இது எப்படி நடந்தது? மத்திய அரசு இந்தப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்கள் உண்மையில் அப்போதைய மாநில அரசிடம் ஆலோசனை நடத்தியதால் இது நடக்கிறது. தி.மு.க., ஆனால், அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க ஒரு தரப்பாக இருந்தது. இந்த முடிவுக்கு தி.மு.க ஒரு தரப்பாக இருந்தது” என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியான ஆவணங்களை சுட்டிக்காட்டி, அவர்கள் காட்டியது என்னவென்றால், 1973 முதல், அப்போதைய மத்திய அரசும் வெளியுறவுத் துறையும் தமிழக அரசு மற்றும் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக தொடர்ந்து விரிவான ஆலோசனை நடத்தியது தொடர்பான ஆவணங்கள் என்று கூறினார்.
“உண்மையில், திமுகவின் நிலைப்பாடு என்னவென்றால், 'சரி, இவை அனைத்தையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், உங்களுக்குத் தெரியும், பொதுவில், நாங்கள் ஆதரிக்க மாட்டோம். எனவே, பொதுவில், நாங்கள் வேறு ஏதாவது சொல்வோம், ஆனால், உண்மையில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று ஜெய்சங்கர் கூறினார். இதன் மூலம், தமிழர்கள் மற்றும் மீனவர்களின் பாதுகாவலர்கள் என்று தி.மு.க கூறுவதை ஜெய்சங்கர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
கச்சத்தீவுப் பிரச்னை அடிக்கடி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வருவதாகவும், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அடிக்கடி கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட கடிதங்களுக்கு பதில் அளித்தது எனக்கு நினைவிருக்கிறது என்று ஜெய்சங்கர் கூறினார்.
முன்னதாக ஏப்ரல் 1-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸைச் சேர்ந்த பிரதமர்கள் கச்சத்தீவு பற்றி அக்கறை காட்டாத அதே நேரத்தில் அலட்சியம் காட்டுவதாகவும், சட்டப்பூர்வ கருத்துக்கள் இருந்தபோதிலும் இந்திய மீனவர்களின் உரிமைகளை பறிகொடுத்ததாகவும் கூறினார்.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் கடல் எல்லை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 1974-ல் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை குட்டி தீவு மற்றும் குட்டிப்பாறை என்று அழைத்தனர். இந்த பிரச்னை திடீரென எழவில்லை என்று வலியுறுத்தினார். ஆனால் எப்போதும் நேரடி விவகாரமாக இருந்தது என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து அப்போதைய வெளியுறவுச் செயலர் அப்போதைய தமிழக முதல்வரும், மறைந்த தி.மு.க தலைவருமான கருணாநிதியிடம் முழுமையாக தெரிவித்ததாக பதிவுகள் இருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மேலும், கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க ஒத்துழைத்ததாகவும் அதற்கு பிறகு இந்த நிலைமை உருவாகியது, இந்து பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது என்று ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.