அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, உலகப் பிரசித்தி பெற்றது. மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8.00 மணியளவில் தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். ஜல்லிக்கட்டு உறுதிமொழியை முதல்வர் வாசிக்க, அனைவரும் அதை திரும்ப கூறினார்கள். விழாவில் தென் மாவட்ட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து நேற்று இரவு கார் மூலம் மதுரை வந்தார். மதுரை நான்குவழிச் சாலையில் அலங்காநல்லூர் அருகே உள்ள தனிச்சியம் பிரிவில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முதல்வருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். வரவேற்பில் தமிழர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், தாரை தம்பட்டை முழங்க, செண்டை மேள கலைநிகழ்ச்சிகளுடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்து புறப்பட்டு சமயநல்லூர் வழியாக பரவை வந்தார். பரவையில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு பாத்திமா கல்லூரி, செல்லூர், கோரிப்பாளையம், தல்லாகுளம் கோகலே ரோடு, பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு வழியாக வந்து மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையை அடைந்து நேற்று இரவு அங்கு தங்கினார்.
அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து இன்று காலை 7 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் புறப்பட்டு அலங்காநல்லூர் வந்தனர். இந்த போட்டியில் 1,241 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடக்கிறது. தங்க நாணயம், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டியை தொடங்கி வைத்து விட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைக்கப்பட்டுள்ள விசேஷ மேடையில் இருந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.
முதல்வர், துணை முதல்வர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.