திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூரில் நற்கடல்குடி ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன.
இதனை திருச்சி ஆர்டிஓ பார்த்திபன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷன்சிங், ஊராட்சி மன்ற தலைவர் எஸ். சண்முகசுந்தரம், விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ராஜா மணிகண்டன்,தொழிலதிபர் பி எம் ஆர் மகேஷ், திருவெறும்பூர் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சூரியூர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் விஜி ஆறுமுகம், விழா கமிட்டியினர் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.
முதல் காளையாக கோயில் காளை காசி, சின்ன கருப்பு ஆகியவை அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.
இதனை மாடு பிடி வீரர்கள் லாபகமாக பிடித்து பரிசுகளை வாங்கிச் சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 750 மாடுகளும் 550 மாடுபிடி வீரர்களும் பங்கெடுத்தனர்.
போட்டியில் வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும் சிறந்த காளைக்கும் பைக்கும், இரண்டாவது பரிசாக வீட்டுமனையும் வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில், திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் சுமார் 600 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலி அருகில் டிரைலர் வாகனங்களை விழா குழுவினர் நிறுத்தி ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“