இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரும், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல மாநில கௌரவ தலைவருமான செந்தில் தொண்டைமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு வந்திருந்தார்.
திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே மிளகுபாறையில் ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிராஜ் தலைமையில் இலங்கை ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதையுடன், மாலைகள், சால்வைகள் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செந்தில் தொண்டைமான் தெரிவித்ததாவது;
தமிழ்நாட்டின் வீரமும், கலாச்சாரமும் போற்றக்கூடியது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் திருச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை சந்தித்ததை மிக, மிக மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன்.
ஒவ்வொரு பாதையில் நமது பயணங்கள் இருந்தாலும், தமிழர்கள் என்ற கலாச்சாரத்தில் ஒன்றாகத்தான் இருப்போம். சுமார் 15 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாதுகாப்புக்காக எங்கள் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து நாம் ஒன்றாகவே உழைப்போம், பயணிப்போம், உதவி செய்வோம்.
இந்திய மீனவர்கள், தமிழக மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே கடல் எல்லையை தாண்டுவதில்லை, கடலுக்கு எல்லை இல்லை சில இயற்கை சீற்றங்களால் அவர்கள் வழி மாறி வந்து விடுகிறார்கள். மீனவர்கள் மேல் எந்த தவறும் இல்லை, ஒவ்வொரு முறையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது, அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவிக்கும் முயற்சியை தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம்.
இந்த செயல் இன்று, நேற்று அல்ல கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து நாங்கள் செய்து வருகிறோம். இனியும் நாங்கள் செய்வோம்.
இலங்கை குடியுரிமை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் தான் விளக்கம் கூற இயலும். இது சம்மந்தமாக சென்னையில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கின்றேன். மேலும், இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். அதுமட்டுமில்லாமல் இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வருகின்றது. அதனை தற்போது சரி செய்து வருகின்றோம் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“