தமிழகத்தில் பல இடங்களில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், சூரியூர் ஜல்லிக்கட்டுகளை தொடர்ந்து, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி மலையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
ஆர்.டி மலையில் 61-வது ஆண்டாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, விழாவில் கலந்து கொள்ள 890 மாடுகள் டோக்கன் பெற்றன, இதில் நேரம் முடிவடைந்த நிலையில் 761 காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டன, 129 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்காமல் திருப்பி அனுப்பப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியில் 59 நபர்கள் காயம் அடைந்தனர், இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் கே.எம்.டி. கார்த்திக் என்பவர் 21 மாடுகளை பிடித்து முதல் பரிசை தட்டி சென்றார்.இவருக்கு காளை மாடு மற்றும் வாசிங்மெசின் பரிசு வழங்கப்பட்டது, 7 காளைகளை பிடித்து திருச்சி சாந்தாபுரம் ரஞ்சித் 2 ம் இடம் பெற்றார்.
இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், ஃபேன், கட்டில் குக்கர், தங்க காசு, கட்டில், பீரோ, சைக்கிள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

அதே நேரம், நான்காவது சுற்றின்போது சோர்வின் காரணமாக தடுப்பு வேலி கம்பி ஓரமாக அமர்ந்திருந்த பள்ளப்பட்டியை அடுத்துள்ள வடசேரியை சேர்ந்த மாடுபிடி வீரர் சிவகுமார் (21) என்ற இளைஞரை மாடு குத்தியதில் வலது கண் பார்வை பறிபோனது.

காயமடைந்த அவர் உடனடியாக திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார். மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்