தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையில், தமிழகம் முழவதும் பல்வேறு இடங்களில் வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உலகளவில் பார்வையாளர்கள் உள்ளனர். ஆண்டு தோறும் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் இந்தபோட்டிக்கு கடந்த 2017-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்த போட்டிகளில் காளைகள் மிகவும் துன்புறுத்தப்படுவதாக இந்தியாவில் உள்ள விலங்குகள் நல வாரியமான பீட்டா, கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த போட்டி தடை செய்யப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த தமிழக இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு பொங்கல் தினத்தில், மதுரையில் முதன்முதலாக தொடங்கப்பட்ட போராட்டம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த போராட்டம் உலகளவில் கவனத்தை ஈர்த்தது.
ஜனவரி 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் கடைசி நாளில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் பலர் கைது செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக மக்களுக்கான பல அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர் பழனிச்சாமி, கடந்த வாரம், அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அரசு ஊழியர்கள் வீடுகட்டுவதற்காக வழங்கப்பட்ட முன்பணம் 25 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளார். இதன் மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் பார்வை அதிமுக பக்கம் திரும்ப வழி செய்வதாக அமைந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"