ஜல்லிக்கட்டுக்கு எதிராக கவிஞர் தாமரை: மாடு பிடி வீரர்கள் அமைப்பு கண்டனம்
"பொங்கல் வாழ்க, மாடுபிடி கொடுமை வீழ்க!", என்று தலைப்பிடப்பட்ட ஒரு பதிவைக் கவிஞர் தாமரை வெளியிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
"பொங்கல் வாழ்க, மாடுபிடி கொடுமை வீழ்க!", என்று தலைப்பிடப்பட்ட ஒரு பதிவைக் கவிஞர் தாமரை வெளியிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisment
தமிழ்நாட்டில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் தான் ஜல்லிக்கட்டு பெருமளவுக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் கவிஞர் தாமரை கண்டன குரல் எழுப்பினார்.
கவிஞர் தாமரை தனது சமூக வலைதள பக்கங்களில் ‘பொங்கல் வாழ்க, மாடுபிடிக் கொடுமை வீழ்க‘ என்று தலைப்பிட்டு ஜல்லிக்கட்டை படிப்படியாகக் குறைத்து முற்றிலும் நீக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இளைஞரணி தலைவர் டி.ராஜேஷ்
இது தொடர்பாகத் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநில இளைஞரணி தலைவர் டி.ராஜேஷ் தெரிவிக்கையில்; கவிஞர் தாமரை திரைப்படப் பாடல் எழுதுவதுடன் தனது கருத்தை நிறுத்திக் கொள்ளட்டும். தமிழனின் மரபுகளை மறக்கடிக்க அவர் வேறு கூட்டத்துடன் சேர்ந்து சதி செய்கிறார் என்றே தோன்றுகிறது.
எது வன்முறை என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் அவரது அறியாமையைக் காட்டுகிறது. மாடு வாய் திறந்து பேசுமா, தன் வலியைச் சொல்ல முடியுமா என்கிறார். கவிஞருக்கு மாடு பேசாது என்பது இப்போதுதான் தெரிகிறதா.
ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள் யாரும் அதிகபட்சமாக 80 கிலோவுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே ஒரு கட்டத்தில் 2 அல்லது 3 பேர் பிடித்தாலும் உடனடியாக அதைத் தடை செய்து விடுகிறார்கள். ஒருவர்தான் பிடிக்க வேண்டும் என்பது போட்டியின் விதி. டன் கணக்கில் எடையைச் சுமந்து செல்லும் காளையை 80 கிலோ எடை கொண்ட வீரன் அடக்குவது எந்த விதத்திலும் கொடுமையோ, வன்முறையோ ஆகாது. நீங்கள் பால், மோர், தயிர், டீ, காபி சாப்பிடும் வழக்கம் உள்ளவராகத்தான் இருப்பீர்கள். பால் கறக்கும்போது, பசு வலிக்கிறது என்று எப்போதாவது கூறியிருக்கிறதா, இல்லை அதனிடம் கேட்டுவிட்டுத்தான் பால் கறக்கிறோமா. கவிஞர் தாமரையின் கருத்து தமிழர்களின் மரபு, வீரம், பாரம்பரியத்துக்கு எதிரானது மட்டுமல்ல.
தமிழர்களுக்கு எதிரான கும்பலிடம் நீங்கள் சேர்ந்து சதி செய்கிறீர்களோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க இருக்கிறது. பல இடங்களில் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. எனவே, தமிழன் அமைதிப்புரட்சி, மெரினா புரட்சி நடத்தி வீர விளையாட்டுக்கு அனுமதி பெற்ற உரிமையைப் பறிக்க நினைக்கும் உங்களின் கொடும்பாவியைக் கொளுத்தி, உங்களின் வீட்டை முற்றுகையிட்டு எங்களின் எதிர்ப்பை காட்ட முடிவு செய்துள்ளோம். இதோடு உங்கள் விசமத்தனமாகக் கருத்தை மூட்டை கட்டி விடுங்கள் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் எச்சரிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"