Advertisment

பால் தினகரன் குடும்பத்திற்கு வீடு, கார் இல்லையா? இவாஞ்சலின் வீடியோவுக்கு ஜேம்ஸ் வசந்தன் காட்டமான பதிலடி

உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு.

author-image
WebDesk
New Update
James Vasanthans question to Jesus Calls evangeline paul dhinakaran

உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பால் தினரனின் மனைவி இவாஞ்சலின் கனடாவில் சொந்தக் கார், வீடு இல்லாமல் கஷ்டப்பட்டோம் என்றும் ஓட்டல் அறையில் அறை எடுத்து தங்கியிருந்தோம் என்றும் கூறினார்.

மேலும் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்ததால் தங்களுக்கு சொந்த வீடு கிடைத்தது என்றும் தனது கனவில் ஒரு தேவதை தோன்றி என்ன கார் வேண்டும் என்று கேட்டார்.

நான் ஒரு காரை காண்பித்தேன். மறுநாள் எனது கணவர் பால் தினகரன், அந்த தேவதை கேட்டதுபோலவே கேட்டார். நாங்கள் சொந்த வீடு, கார் வாங்கி விட்டோம் என்றார்.

இவாஞ்சலின் பால் தினகரனின் இந்த வீடியோ சமீபத்தில் வைரலானது. இதனை நெட்டிசன்கள், முற்போக்காளர்கள் பலர் கேலி கிண்டலாக பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில், “திருமதி இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களுக்கு,

அண்மையில் நீங்கள் பேசியிருந்த ஒரு காணொலி என் கவனத்துக்கு வந்தது. இந்தக் குறிப்பிட்டக் காணொலி கிறிஸ்தவர் மட்டுமல்லாது பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அது நேர்மறையான காரணத்துக்காக அல்ல; ஏளனத்துக்கும் நகைப்புக்கும்.

Advertisment

இந்தக் கேலியும் கிண்டலும் உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தைப் பற்றியோ தனிப்பட்ட விதத்தில் இருந்திருந்தால் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. உங்களுக்காக கொஞ்சம் பரிதாபப்பட்டுவிட்டு, என் வேலையைப் பார்த்திருப்பேன். ஆனால், அது ஆண்டவரையும், ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் தவறாகக் காட்டியதால் இந்தப் பகிர்வு.

உங்கள் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான குடும்பம் என்பது உலகத்துக்கே தெரியும்.

புகழிலும், பேரிலும் மட்டுமல்ல; பணத்திலும், சொத்திலும்தான். பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு நீங்கள் அதிபதி என்பது ஊரறிந்த ரகசியம். உங்கள் மாமனார் காலத்திலிருந்து இன்று உங்கள் பேரப்பிள்ளைகள் வரை அத்தனை பேரும் எப்படிப் படாடோபமான செல்வச் செழிப்பில் திளைக்கிறவர் என்பது மறைக்கவே இயலாத உண்மை. உலகப் பணக்காரர் பட்டியலில் ஏன் உங்கள் குடும்பத்தின் பெயர் வருவதில்லை என்று நாங்கள் வியப்பதுண்டு!

உங்கள் குடும்பம் எதற்கு, எப்படி கனடா நாட்டுக்குச் சென்றது; அந்தக் குடியுரிமை எப்படி வாங்கினீர்கள்; பின் எதற்காக, எப்படி அமெரிக்காவுக்கு மாற்றலாகிச் சென்றீர்கள்; இன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரத்தில் எவ்வளவு பெரிய வீட்டை வாங்கிக் குடியிருக்கிறீர்கள்; வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தச் செய்தியை எவ்வளவு ரகசியமாக பல ஆண்டுகள் ஒளித்துவைத்தீர்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலகோடி வருமானம் போய்விடும் என்பதால் அதிகப் படிப்போ, உலக அறிவோ இல்லாத பல இலட்ச பாமர விசுவாசிகளை எப்படி இங்கிருப்பது போலவே ஏமாற்றி வந்தீர்கள் என்பவைப் போன்ற பல தகவல்களை மேல் மட்டக் கிறிஸ்தவர் அறிவர்.இந்தச் சூழலில் நீங்கள் "எப்படி ஒரு வீடு கூட இல்லாமல் ஓட்டலில் தங்கியிருந்தோம்" என்று நடிகையர் திலகம் அவர்கள் திறமையை மிஞ்சும் விதமாகக் குரலை தாழ்த்தி, உதடுகள் துடிக்க, வரும் கண்ணீரை அடக்க முயல்வது போலெல்லாம் ஒரு சாகஸம் செய்திருக்கிறீர்கள்!

ஒரு வீடு இல்லாமல் இத்தனை குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய் கனடா நாட்டில் ஒரு நட்சத்திர விடுதியில் நாட்கணக்கில் தங்கக்கூடியவருக்கு எவ்வளவு பண வலிமை இருக்கும் என்று கொஞ்சம் அறிவு உள்ளவன் கூட யோசிப்பான் என்று உங்களுக்குத் தோணலையா?

இவ்வளவு அப்பட்டமாகப் பொய் பேசினால் அசிங்கமாகி விடுமே என்றுகூட உங்களால் சிந்திக்க முடியலையா?

எதற்காக தேவையற்ற இந்தப் பொய் நாடகம்? அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து? வேதத்திலுள்ள நல்ல செய்திகளை மட்டும் நீங்கள் பேசினால் போதும்; உங்களுடைய பொய்சாட்சிகள் வேண்டாம்!

வீடு வாங்கிய கதையும், கார் வாங்கிய கதையும், இந்த அம்மா விடுற கதைகளையும் கேட்கக் கேட்கக் கொதிக்கிறது என்று பல கிறிஸ்தவ விசுவாசிகள் புலம்புகிறார்கள். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகமே அவமானத்தில் குறுகி நிற்கிறது.

உங்கள் குடும்பத்தின் உண்மையான பின்னணியை அக்குவேறு ஆணிவேறாகப் பட்டியலிடக் காத்திருக்கின்றனர் பலர். அது கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் மட்டுப்படுத்திவிடும் என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காக்கின்றனர்.

கிறிஸ்தவத்தை கேலிக்கூத்தாக்க முயல்கிற பல கோமாளிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்க உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது. நற்செய்தியைப் பரப்பவேண்டிய பொறுப்பிலுள்ள நீங்கள் ஏன் இப்படிப் பொய்ச்செய்தியைப் பரப்பி பணம் பறிக்க முயல்கிறீகள்?

மூத்த தினகரன் ஐயா தொடங்கிய அந்த நல்ல பணியை, உங்களுக்கென்று கொடுக்கப்பட்டிருக்கிற ஊழியத்தை கொஞ்சமேனும் உண்மையுடனும், மனச்சான்றுடனும் செய்ய முற்படுங்கள். 

இருக்கிற பணம் போதும். இதற்கு மேலும் ஏன் இப்படி வெறிபிடித்து அலைகிறீர்கள்? மக்களின் சாபத்துக்குக் கூட நீங்கள் தப்பித்து விடலாம். ஆண்டவரின் சினத்துக்கு ஆளாகிவிடாமல் கொஞ்சம் திருந்திச் செயல்படப் பாருங்கள்.

பலர் இன்னமும் உங்களை நம்புகிறார்கள். அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா, உங்களை நினைத்து வேதனைப்படுவதா என்று புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment