DMK Convenes All Party Meeting: காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று மாலை நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க இன்று (ஆகஸ்ட் 10) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. அக்கட்சிகளின் சார்பில் கி.வீரமணி, வைகோ, தங்கபாலு, ரவி பச்சமுத்து, திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில், பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சி தொடக்கத்திலேயே தரைதட்டி விட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பெரும்பான்மை மசோதாக்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை. ஏற்கனவே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுடன் மேலும் பிரச்சனைகளில் கூடிவிட்டன. இந்திய பொருளாதாரம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை தடுத்து நிறுத்த அரசு தவறிவிட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் நடத்தப்பட்டு இரண்டாம்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.