ஏ.எஸ்.பி., எஸ்.பி., டி.ஐ.ஜி. வடக்குமண்டல ஐ.ஜி என தான் வகித்து வந்த அத்தனை காவல்துறை பதவிகளிலும் தனி முத்திரை பதித்த ஜாங்கிட் ஐ.பி.எஸ். இன்று ( ஜூலை 31ம் தேதி), பணி ஓய்வு பெறுகிறார்..
1985ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான ஜாங்கிட், ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் 1985ம் ஆண்டில்ல திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.ஆக பணியமர்த்தப்பட்டார்.
தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் 1999ம் ஆண்டுவாக்கில் அதிகளவில் ஜாதிக்கலவரங்கள் வெடித்தன. ஓய்வு பெற்ற நீதிபதி, கோமதிநாயகம் தலைமையிலான கமிஷன், துாத்துக்குடி, எஸ்.பி.,யாக, ஜாங்கிட்டை பணியமர்த்த வேண்டும் என, பரிந்துரை செய்தது.இதையடுத்து, அம்மாவட்ட, எஸ்.பி.,யாக பணியமர்த்தப்பட்ட அவர், அதிரடி நடவடிக்கையால், ஜாதிக் கலவரத்தை ஒடுக்கினார். மதுரை, நெல்லை மாவட்ட போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
வடக்கு மண்டல, ஐ.ஜி.,யாக இருந்தபோது, 2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த, உ.பி., மாநில பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்தார்.சென்னை கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோது, ரவுடிகள், 'பங்க்' குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுன்டர் செய்தார்.
பணிஓய்வு : தற்போது கும்பகோணம் போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக உள்ள ஜாங்கிட், இன்று பணிஓய்வு பெறுகிறார்.
ஜாங்கிட் கூறியதாவது:பாரம்பரியமிக்க, தமிழக காவல் துறையில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். எழுத்தும், படிப்பும் என் பொழுதுபோக்கு. இந்திய கலை மற்றும் கலாசாரம், இந்திய பொருளாதாரம் என, 10 புத்தகங்களை எழுதி உள்ளேன். இப்பணி, மேலும் தொடரும்.ஓய்வு பெற்ற பின், என் சொந்த ஊரில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையங்கள் துவங்கி, ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளிகக உள்ளேன்.இவ்வாறு, ஜாங்கிட் கூறினார்.
ஜாங்கிட், பவாரியா கொள்ளை கும்பலை எதிர்கொண்ட விதம் குறித்து, இளம் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஹீரோ கார்த்தி ஆக இருந்தாலும், இந்த கதையின் ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் தான்....