2023ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து சென்னை மக்களுக்கு புத்தகக் கண்காட்சி, பொருட்காட்சி மற்றும் சென்னை சங்கமம் ஆகியவை வரிசையில் காத்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் 46-வது முறையாக, சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5.30 மணிக்கு தொடங்கிவைக்கிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார்.
இதையடுத்து, இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்துவது வழக்கம். ஆனால், கொரோனா பெருந்தொற்றால் 2020 மாற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இந்நிகழ்வுகள் நடத்தப்படவில்லை.
ஆகையால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது 47-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த சுற்றுலா பொருட்காட்சி 70 நாட்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13 முதல் 17ஆம் தேதி வரை “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது. தமிழ் கலாச்சாரங்களை பறைசாற்றும் விதமாக இந்த கலை நிகழ்ச்சி மக்களுக்காக நடைபெறவிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil