Jawaharulla condemns Godse memorial event : மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது போன்ற செயலை இனி யாரும் செய்யக் கூடாது என்ற உணர்வை தரும் வகையில் தமிழக அரசு இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்ஸேவை அவரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி அன்று ஹரியானாவில் உள்ள அம்பலா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
காந்தி கொல்லப்பட்டத்தை கேட்ட பெரியார், இந்திய நாட்டிற்கு காந்தி தேசம் என பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார். இப்படியாக காந்தியைப் போற்றும் மண்ணில், திருப்பூர் சிவசேனா அலுவலகத்தில் யுவ சேனா அமைப்பினர் வீரவணக்க நாளை கொண்டாடியது கண்டிக்கத்தக்கது என்று அறிக்கையில் கூறியுள்ளார் ஜவாஹருல்லா.
தமிழக சமூக நல்லிணக்க பண்பாட்டுக் கூறுகளை சிதைக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம் தமிழகத்தின் தத்துவார்த்த சிந்தனையை சிதைக்கும் முயற்சியாகும். எனவே இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கடும் பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil