மருத்துவமனை செல்ல மறுத்தார் ஜெயலலிதா.... சசிகலா பரபரப்பு வாக்குமூலம்!

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரின் அனுமதியிடன் அவரை 4 முறை வீடியோக்கள் எடுத்துள்ளோம்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவரது தோழி சசிகலா,  திடுக்கிடும் பல தகவல்களை ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார்.

”செப்டம்பர் 22, 2016 இரவு 9.30 மணியளவில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உதவிக்கு அழைத்தார்.   போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முதல் மாடியில் தான் அவரின் குளியலறை உள்ளது. பல் துவக்க சென்ற அவர், திடீரென்று சத்தம் போட்டதும் நாங்கள் ஓடி சென்று பார்த்தோம்”  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடைப்பெற்று வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் சசிகலா அளித்த வாக்குமூலங்கள் தான் இவை.

கடந்த ஆண்டு மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்திடம் இருந்து, ஜெயலலிதாவின் மருத்துவர்கள், அரசியல் ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பட்டது. சம்மன் அனுப்பிய அனைவரும் நேரில் ஆஜராகி ஜெ. மரணம் தொடர்பான தங்கள் தரப்பு வாக்குமூலத்தை அளித்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, விசாரணை ஆணையம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகியோ அல்லது பிரமாணபத்திரம் தாக்கல் செய்தோ சசிகலா வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதுவரை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்த பலர், சசிகலாவிற்கு எதிராக  பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளதால், அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக சசிகலா நேரம் கடத்தாமல் வாக்குமூலம் அளிக்கும்படியும்  அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு, தனது வழக்கறிஞர் மூலமாக சசிகலா பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும்,  அவர்களின் விபரங்களை தனக்கு ஆணையம் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பச்சைக்கொடி காட்டிய விசாரணை ஆணையம் சசிகால தரப்பில் கேட்ட அனைத்து ஆவணத்தையும் அவரின் சிறைக்கு அனுப்பி வைத்தது. இருந்தபோதும், சசிகலா தனது தரப்பு வாக்மூலத்தை அளிக்க தொடர்ந்து காலம் கடத்தி வந்தார். ஜெயலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில்  அவருடனே இருந்த தோழி சசிகலாவின் வாக்குமூலம் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபடும் வரை அவருடன் பிரியாமல் இருந்தது சசிகலா தான். எனவே, அவரின் வாக்குமூலத்தை தான் அனைத்து தரப்பினரும்  எதிர் நோக்கி இருந்தனர்.

இந்நிலையில்,  ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான தனது வாக்மூலத்தை சசிகலா பிரமாணபத்திரம் மூலம் தாக்கல் செய்துள்ளார்.  அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதோ சசிகலாவின் வாக்மூலங்கள்….

“அன்று இரவு குளியலறையில் ஜெயலலிதா மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவரின் உடல் நிலை  மோசமாக உள்ளது என்பது எனக்கு நன்கு தெரிந்தது. உடனே நான், உறவினர் டாக்டர் சிவகுமாருக்கு போன் செய்தேன் . அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் விஜயகுமார் ரெட்டிக்கு போன் செய்து இரண்டு ஆம்புலன்ஸ்களை வரவழைத்தார். அடுத்த கணமே  ஆம்புலன்ஸ் மூலம் ஜெயலலிதாவை  மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். போயஸ் கார்டனில் இருந்து சுமார் 10 அல்லது 15   நிமிடங்களில் அப்போலா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்று விட்டது.

ஆம்புலன்ஸில் படுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா என்னிடம் நாம் எங்கு சென்றுக் கொண்டிருக்கிறோம் என்று கேட்டார். நான் அதற்கு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இருக்கிறோம் என்றேன். அவரின் உடல்நிலையை பார்த்து நான் பலமுறை அவரிடம் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறியுள்ளேன். ஆனால், அவர் மருத்துவமனை செல்வதை முற்றிலும் வெறுத்தார்.

ஜெயலலிதா கடுமையான  மன அழுத்தத்தில் இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு விடுவோமா என்றும் வேதனை பட்டார் . அதுவே அவரது உடல்நிலையை முற்றிலுமாக  பாதித்தது. கடந்த 2014ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த போதே ஜெயலலிதாவிற்கு மனதளவில் வேதனை அதிகரித்தது.

ரத்த சர்க்கரை அளவும் அதிகரித்தது. அதன் பின்பு, விடுதலையாகி வந்த பின்னரும் பாதிப்பு தொடர்ந்தது. அதன் பின்பு தான் ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகும் ஜெயலலிதா உடல் நலம் மோசமானது. நீரிழிவு மருத்துவர், தோல்நோய் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 16ஆம் தேதிவரை மாத்திரை சாப்பிட்டார்.  சரியாக செப்டம்பர் 19ஆம் தேதியன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது .

காய்ச்சல் ஏற்பட்ட உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்தார். அதன் பின்பு, 22 ஆம் தேதி உடல்நிலை மோசமானதால்  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.  செப்டம்பர் 21 ஆம் தேதி தான் அவர் இறுதியாக கலந்துக் கொண்ட அரசு நிகழ்ச்சி. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு 20 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை செப்டம்பர் 22- 27 தேதிகளில்  ஓபிஎஸ், தம்பித்துரை, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் பார்த்தனர். அதன் பின்பு 27 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து  கீழ் தளத்தில் உள்ள அறைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை, பாதுகாப்பு காவலர்களான பெருமாள் சாமி மற்றும் வீரபெருமாள் பார்த்தனர். அப்போது அவர், “நான் இப்போது நன்றாக இருக்கிறேன். பயப்பட வேண்டாம். விரைவில் வீட்டிற்கு வந்துவிடுவேன். மருத்துவர்கள் இரண்டு மூன்று நாட்கள் என்னை மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்க சொன்னார்கள்”என்று பேசினார். இதை தூரத்தில் இருந்தப்படியே அதிமுக அமைச்சர்கள் சிலரும் பார்த்தனர்.

பின்பு, அக்டோபர் 22 ஆம் தேதி முன்னாள் தமிழ்நாடு பொறுப்பு  ஆளுநர் வித்யாசாகர் ராவ், மருத்துவமனைக்கு வந்தார். அப்போது கண்ணாடி அறையில் இருந்த ஜெயலலிதா ஆளுநரைப் பார்த்து கையசைத்தார்.  பின்பு, நவம்பர் 19 ஆம் தேதி  ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டார். அந்த சமயத்தில், அமைச்சர் நிலோஃபர் மற்றும் இதர அமைச்சர்கள் சிலர் ஜெயலலிதாவை பார்த்தனர்.

மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா உயிரோடு இருந்ததற்கும், பேசியதற்கும் என்னிடம் பல சாட்சியங்கள் உள்ளன. இதை நேரில் பார்த்த பலரும் உண்டு.  அதே போல் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரின் அனுமதியிடன் அவரை 4 முறை வீடியோக்கள் எடுத்துள்ளோம்.  அதை நான் ஆணையத்தில் சமர்ப்பிக்கிறேன். இதே போல் அப்போலோ நிர்வாகமும் அவருக்கு சிகிச்சை அளித்த வீடியோக்களை  வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற போது, 5 அதிகாரிகளுடன் காவிரி வழக்கு குறித்தும் பேசினார். அதே போல் சட்டப்பேரவையில் நடைப்பெற்ற கூட்டத்தொடர் குறித்தும் கேட்டறிந்தார்.” என்று 55 பக்கங்கள் நிரம்பிய பிரமாணப்பத்திரத்தை சசிகலா அவரது வழங்கறிஞர் அரவிந்த் மூலம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்பித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close