”போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் அறையை வருமான வரித்துறையினர் சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை”, என இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என சுமார் 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், வருமான வரித்துறையினர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில், நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) சுமார் 9.30 மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு குழுமிய அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விவேக், “ஜெயலலிதா இருந்த அறையை சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகள் முயன்றார்கள். நாங்கள் அனுமதிக்கவில்லை.
அம்மா வாழ்ந்த இந்த கோவிலுக்கு இன்று ஒரு துன்பம் வந்திருக்கிறது. இதை யாருமே தட்டிக் கேட்கவில்லை. நான், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உட்பட எல்லோருமே கையை விரித்துவிட்டோம் என்பது தான் இதில் வேதனையான விஷயம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களை வருமானவரித் துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். அதற்கு எங்களிடம் பதில் கேட்டால் நாங்கள் பதிலளிப்போம். இதைத் தாண்டி, இதில் அரசியல் இருப்பதாக இப்பொழுது கூற முடியாது.”, என தெரிவித்தார்.