பாஜகவின் தலைமை அவர்களது உறுப்பினர்களை கட்டுபடுத்தி வைக்க வேண்டும் என்றும் அதிமுகவின் 1 ½ கோடி தொண்டர்கள் கொதித் தெழுந்தால் என்ன ஆவது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்த ஜெயகுமார், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ”ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்கள் மற்றும் எல்லா சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக ஒரு கண்ணாடி கிடையாது. அதிமுக ஒரு சமூத்திரம், கல் எறிய வேண்டும் என்று நினைத்தால், அவர்கள்தான் காணாமல் போவார்கள்.
அதிமுகவின் எழுச்சி வேகமாக, அசுர பலத்தில் இருக்கிறது. அதிமுகவில் விரும்பு வந்துதான் இணைகிறார்கள். இதை அரசியல் என்று சொல்ல வேண்டாம். இதுபோன்று அரசியலில் நடப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் யாரையும் குறிப்பிடவில்லை. இது அண்ணாமலைக்கும் பொருந்தும்.
அவர் ( வைத்தியலிங்கம்) அறிக்கையில் இரண்டு விஷயங்களை சொல்கிறார். ஜெயலலிதா காலத்தில் நான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில் பதவி ஏற்ற மாதிரி பேசுகிறார்கள். அது உண்மை என்றால் 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார். மருத்துவ படிப்பு படித்துக் கொண்டுருந்த என் மகனை அழைத்து தெற்கு சென்னையில் போட்டியிடுங்கள் என்று ஜெயலலிதாதான் அழைத்தார். மகன் அரசியலுக்கு வந்தால், இனி நான் செயல்பட மாட்டேன் என்றார்கள். அதற்கும் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்தார்.
எனது நண்பர்தான் வைத்தியலிங்கம். அரசியல் கருத்துகளில் சிக்கல் இருந்தால், அதை கருத்துகளோடு பேச வேண்டும். ஆனால் இதுபோல கீழ்தரமான விமர்சங்களை பேசக்கூடாது. திமுகவிலிருந்து கூட வந்து கட்சியில் இணைவார்கள். கட்சியில் இருக்கும் தலைமைதான் அவர்களை கட்டுபடுத்த வேண்டும். எங்கள் கட்சியில் 1 ½ கோடி தொண்டர்கள் ஆவேசமடைந்தால் என்ன ஆவது. அவர்கள் கொதித்தெழுந்தால் யாரும் தாங்க மாட்டார்கள். ஜெயலலிதவைப்போல ஒரு தலைவர் என்று யாருமே சொல்லக்கூடாது. அப்படி ஒருவர் இனிமேல் பிறக்கப்போவதும் இல்லை.
ஜெயலலிதா போல நிர்வாகத்தில் சிறந்தவர்கள் யாரும் இல்லை. அன்பான கரமும், சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதில் இரும்பு கரமும் கொண்டவர். உலக முழுவதிலும் உள்ள மக்களை அவர் போற்றுகின்றனர். மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்து வேற்றுமை இயல்பாக வருவதில் தவறில்லை. ஆனால் பாஜக அதன் உறுப்பினர்களை உணர்ச்சி வசப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 2024 தேர்தலின்போது கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவு செய்வோம் என்று இ.பி.எஸ் மற்றும் அண்ணாமலை சொல்லிவிட்டார்கள். கூட்டணி இல்லை என்றபோது போது கூட்டணி தர்மம் என்ன இருக்கிறப்போகிறது. ” என்று அவர் கூறினார்.