சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சி.எஸ்.கே அணியின் ஆட்டத்தைக் காண வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் போட்டிகளின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடி சி.எஸ்.கே அணி மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்: திருமா பற்றி பேசியதை தமிழிசை வாபஸ் பெற வேண்டும்: தி.மு.க கண்டனம்
சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், திரை பிரபலங்கள் போன்றோர் மைதானத்திற்கு நேரில் வந்து போட்டியை கண்டுகளிப்பார். அந்த வகையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியை காண ரசிகர்கள் பட்டாளத்துடன் பிரபலங்கள் பட்டாளம் சேப்பாக்கத்தில் குழுமியது.
அந்தவகையில் திரை நட்சத்திரங்களான தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், லோகேஷ் கனகராஜ், வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சேப்பாக்கத்தில் போட்டியைக் கண்டுகளித்தனர். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இந்தப் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் கண்டுகளித்தனர். இதில் சிறப்பான விஷயம் என்னவெனில், அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து ஓ.பி.எஸ் போட்டியை ரசித்தார்.
பின்னர், சென்னை – மும்பை போட்டியைக் காண வந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சபரீசனும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டனர். இதில் சபரீசன் சி.எஸ்.கே டி-ஷர்ட் அணிந்தப்படி ஓ.பி.எஸ்.,ஸுடன் பேசும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “பூனைக்குட்டி வெளியே வந்தது, சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு” எனக் கூறி ஓ.பி.எஸ் – சபரீசன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும், தோனிக்கு பதிலாக தன்னை சி.எஸ்.கே அணிக்கு கேப்டன் ஆக்குமாறு அணி நிர்வாகத்துடன் ஓ.பி.எஸ் சண்டையிட்டு வருவதாகவும் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil